தடை உத்தரவு இல்லாத பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்ய எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 04th January 2019 07:35 AM | Last Updated : 04th January 2019 07:35 AM | அ+அ அ- |

தடை உத்தரவு கட்டுப்பாட்டுக்குள் வராத பிளாஸ்டிக் பொருள்களையும் பறிமுதல் செய்வதாகக் கூறி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
தமிழகம் முழுவதும் ஜனவரி 1 முதல் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தடை விதிக்கப்பட்ட பொருள்களின் பட்டியலில் இல்லாத பிளாஸ்டிக் பொருள்களையும் பறிமுதல் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிளாஸ்டிக் கடைகள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளன.
இந்நிலையில், மதுரை மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஜெய.ராஜசேகர் தலைமையில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் ஏராளமானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதன்பின் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியது: பிளாஸ்டிக் தடைக்கான உத்தரவில் அரசு அறிவித்துள்ள 14 பொருள்களைத் தவிர்த்து பிற பொருள்களையும் ஒருமுறை பயன்பாடு எனக் கூறி பறிமுதல் செய்யப்படுகிறது.
சில இடங்களில் பிளாஸ்டிக் கன்டெய்னர், டப்பா, பிளாஸ்டிக் உறைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் தடை கட்டுப்பாட்டுக்குள் வராத பொருள்களைப் பறிமுதல் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை மேம்படுத்தவும், பிளாஸ்டிக் கழிவுகளைக் கையாளுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் தான் பிரச்னைக்குத் தீர்வாக இருக்கும். அதற்கான திட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...