கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
By DIN | Published On : 07th January 2019 08:17 AM | Last Updated : 07th January 2019 08:17 AM | அ+அ அ- |

மூன்று கட்டங்களாக நடந்த போனஸ் மற்றும் கூலிஉயர்வு பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாததால் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை (ஜன.7) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த உள்ளனர்.
மதுரை நகர், மதுரையை அடுத்துள்ள கைத்தறி நகர், சக்கிமங்கலம், வண்டியூர், பெருங்குடி, அவனியாபுரம், திருநகர், பாம்பன் நகர், கடச்சனேந்தல், ஸ்ரீவாசா காலனி, எல்.கே.டி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்கள் வேட்டி, கோடம்பாக்கம் ரக சேலைகள், பட்டுச்சேலைகள் ஆகியவற்றை கூலிக்கு நெசவு செய்து தருகின்றனர்.
நெசவாளர்களின் கூலி உயர்வு - போனஸ் தொடர்பான முந்தைய ஒப்பந்தம் 2018 நவம்பர் 5 ஆம் தேதியுடன் காலாவதியானது. நவம்பர் 6 முதல் 40 சதவீத கூலி உயர்வும், 20 சதவீத போனஸ் வழங்கவும் அனைத்து "நைஸ்' ரக கைத்தறி தொழிற்சங்க ஐக்கிய குழு, ஜவுளி உற்பத்தியாளர்களை வலியுறுத்தியது.
இந்நிலையில், மதுரை கோட்டாட்சியர் முன்னிலையில் நவம்பர் 28 முதல் இதுவரை 6 முறை நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படவில்லை. கோரிக்கையை நிறைவேற்றாத ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது என அனைத்து "நைஸ்' ரக கைத்தறி தொழிற்சங்க ஐக்கியக் குழு முடிவு செய்துள்ளது.
இதன்படி, திங்கள்கிழமை (ஜன. 7) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது எனவும் ஜனவரி 8-ஆம் தேதி உண்ணாவிரதம் இருப்பது உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று ஐக்கியக் குழுவின் செயலர் ஏ.எஸ்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.