தேர்வு பயம் நீங்கியது: மாணவர்கள் கருத்து
By DIN | Published On : 07th January 2019 07:05 AM | Last Updated : 07th January 2019 07:05 AM | அ+அ அ- |

மதுரையில் நடைபெற்ற "சிகரத்தை வெல்வோம்' நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தேர்வு பயம் நீங்கியதாக மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.
தினமணி மற்றும் சிஇஓஏ பள்ளி சார்பில் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற "சிகரத்தை வெல்வோம்' நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் கூறியது:
பிளஸ் 2 மாணவி வி.எஸ். அக்ஷயா : பிளஸ் 2 தேர்வுக்குப் பின்னர் அனைவரும் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளையே பரிந்துரை செய்கின்றனர். பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களை அச்சப்படுத்தும் வகையில் தான் கருத்துகள் நிலவுகின்றன. ஆனால், தற்போதைய சூழலில் மருத்துவம், பொறியியல் தவிர்த்து வேறு என்ன பாடங்களை படிக்கலாம் என்ற தெளிவு "சிகரத்தை வெல்வோம்' நிகழ்ச்சி மூலம் கிடைத்துள்ளது. மேலும், பொதுத் தேர்வை எப்படி எளிமையாக அணுக வேண்டும், தேர்வில் விடையளிக்கும் முறை, தேர்வுக்கான கால அவகாசத்தில் ஒவ்வொரு நிமிடமும் எப்படி பயன்படுத்துவது, எந்த கேள்விக்கு எவ்வாறு விடையளிப்பது என்பன போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கும் இந்நிகழ்ச்சி மூலம் விடை கிடைத்துள்ளது என்றார்.
எம். முத்து பவித்ரன்: தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பிளஸ் 2 தேர்வில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
புதிய தேர்வு முறைக்கு எப்படி நம்மை தயார்படுத்திக் கொள்வது என்பதற்கு, இந்த சிகரத்தை வெல்வோம் கருத்தரங்கு உதவியாக இருந்தது என்றார்.