நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு: அஇமூமுக வலியுறுத்தல்
By DIN | Published On : 03rd July 2019 08:37 AM | Last Updated : 03rd July 2019 08:37 AM | அ+அ அ- |

நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் வலியுறுத்தியுள்ளது.
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ந.சேதுராமன் தலைமையில் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பொதுச் செயலர் எஸ்.ஆர்.தேவர், பொருளாளர் வி.பி.பாண்டியன், இணைச் செயலர் ரா.பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழ் ஆண்டில் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இருப்பினும் அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள் மருத்துவம் படிக்கக் கூடிய வாய்ப்பு அரிதாகி வருவதால், அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வேண்டும்.
தூத்துக்குடி விமான நிலையத்துக்கு மாவீரன் சுந்தரலிங்கம், திருச்சி விமான நிலையத்துக்கு மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர், திருச்சி விமான நிலையத்துக்கு பேரரசர் ராஜராஜ சோழன், சேலம் விமான நிலையத்துக்கு தீரன் சின்னமலை, கோவை விமான நிலையத்துக்கு ஜி.டி.நாயுடு, மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும்.
ஹிந்தியை கட்டாயப்படுத்தக் கூடாது, தொண்டியில் துறைமுகம் அமைப்பது, சீர்மரபினர் நலனுக்காக டிஎன்டி சலுகைகள் மீண்டும் கிடைக்கும் வகையில் அரசாணை பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.