செயற்கை சுவாசக் கருவிகள் பயன்பாடு: மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு பயிற்சி
By DIN | Published On : 09th June 2019 02:53 AM | Last Updated : 09th June 2019 02:53 AM | அ+அ அ- |

மதுரை அரசு மருத்துவமனையின் விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள செவிலியர்களுக்கு, நவீன செயற்கை சுவாசக் கருவி பயன்படுத்துவது குறித்து சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
இம் மருத்துவமனையின் விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அண்மையில் மின் தடை ஏற்பட்டபோது, செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் 5 பேர் உயிரிழந்தனர். மின்தடை காரணமாக செயற்கை சுவாசக் கருவிகள் செயல்படாததால், நோயாளிகள் உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்தது.
இது குறித்து மருத்துவமனை டீன் வனிதா இரு கட்டங்களாக அறிக்கை தாக்கல் செய்தார். அதில், மின்தடை காரணமாக செய்றகை சுவாசக் கருவி செயல்பாடு தடைப்படவில்லை, பேட்டரி உதவியுடன் சுவாசக் கருவி செயல்பட்டது.
எனவே, உடல்நிலை மோசமடைந்ததன் காரணமாகவே 5 நோயாளிகளும் உயிரிழந்தனர் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டாலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ராஜாஜி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சிஎக்ஸ் 5 நவீன செயற்கை சுவாசக் கருவியைப் பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, ஜூன் 3-ஆம் தேதி மதுரை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் உள்ள 28 செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள செவிலியர்களுக்கு சனிக்கிழமை காலை மற்றும் மாலை என 2 கட்டங்களாக சிஎக்ஸ் 5 நவீன செயற்கை சுவாசக் கருவியை கையாளுவது குறித்து பயிற்சி மற்றும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், 40 செவிலியர்கள், 15 செவிலியர் பயிற்சி மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், நவீன செயற்கை சுவாசக் கருவியானது, ஆக்சிஜன் குழாயில் கசிவு அல்லது அடைப்பு ஏற்பட்டால் எச்சரிக்கை ஒலி எழுப்பும். இதன்மூலம், பிரச்னைகளை உடனடியாகவும், எளிதாகவும் சரிசெய்துகொள்ளும் வசதி உள்ளது. நோயாளிக்கு செலுத்தப்படும் ஆக்சிஜன் அதிகமானாலோ, குறைந்தாலோ சிஎக்ஸ் 5 கருவி எழுப்பும் எச்சரிக்கை ஒலி மூலம் நோயாளிக்கு தேவையான ஆக்சிஜன் அளவை சரி செய்து கொள்ளலாம்.
மின்தடை போன்ற நேரங்களில் பேட்டரி மற்றும் யூபிஎஸ் உதவியுடன் தடையின்றி செயல்படும் வகையில், சிஎக்ஸ் 5 செயற்கை சுவாசக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை எளிதாகப் பயன்படுத்தும் வகையில், தொடுதிரை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என, பயிற்சியின்போது விளக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, ஜூன் 10-ஆம் தேதி பல்நோக்கு மருத்துவமனையில் பயிற்சி எடுக்காத செவிலியர்களுக்கும், ஜூன் 14-ஆம் தேதி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.