மதுரையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் 16 மணி நேரம் தாமதம்: பயணிகள் அவதி
By DIN | Published On : 09th June 2019 02:54 AM | Last Updated : 09th June 2019 02:54 AM | அ+அ அ- |

மதுரை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 16 மணி நேரம் தாமதமாக சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றது.
மதுரை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகள் விமானம் வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிக்கு புறப்படத் தயாராக இருந்தது. ஆனால், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த விமானத்தில் இருந்த பயணிகள் 163 பேரும் இறக்கிவிடப்பட்டு, விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டனர்.
அதையடுத்து, சென்னையிலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்து, விமானத்தை சரிசெய்த பின்னர், சுமார் 16 மணி நேரம் கழித்து சனிக்கிழமை பிற்பகல் 3.40 மணிக்கு விமானம் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றது.
பயணிகள் அவதி: சிங்கப்பூர் செல்லவிருந்த பயணிகள் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டதால், வயதானவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். போதிய உணவு வழங்கப்படவில்லை என்றும் பயணிகள் புகார் அளித்தனர். மேலும், விமானம் தாமதத்தால் தாங்கள் குறித்த நேரத்தில் சிங்கப்பூர் செல்லமுடியவில்லை என்றும், இதனால் தங்களது பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், பயணிகள் குற்றம்சாட்டினர்.