கரும்பு நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஜூன் 20-இல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 14th June 2019 09:58 AM | Last Updated : 14th June 2019 09:58 AM | அ+அ அ- |

கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் மதுரையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜூன் 20-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகக் குழு கூட்டம் மதுரையில் அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் என்.பழனிசாமி தலைமை வகித்தார்.
சங்கத்தின் தாலுகா செயலர்கள் அய்யங்காளை (திருமங்கலம்), கே.மொக்கமாயன் (உசிலம்பட்டி), மீனாட்சிபுரம் பிச்சை (மேலூர்) நிர்வாகிகள் மலையாண்டி, ஸ்டாலின் குமார், போஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை செய்த கரும்பு பாக்கி ரூ.19 கோடியை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்குவது, விவசாயக் கடன்களை முழுமையாக மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்வது, ஓராண்டுக்கும் மேலாக வழங்கப்படாமல் உள்ள விவசாய பம்ப் செட்களுக்கான இலவச மின்இணைப்பை உடனடியாக வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 20-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.