மதுரையில் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இருவர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர்.
மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த ஜெயம் என்பவரின் மகன்கள் ரஞ்சித் ( 25), அஜீத்( 23). இவர்களுக்கும் பிபி குளத்தைச் சேர்ந்த விக்னேஷ்குமார் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் விக்னேஷ் குமாரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சகோதரர்கள் இருவரும் அண்மையில் நிபந்தனை ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இந்நிலையில் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புதன்கிழமை காலை கையெழுத்திடச் சென்ற போது, விக்னேஷ்குமார் தரப்பினர் வழிமறித்து ஆயுதங்களால் தாக்கியதில் அஜீத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரஞ்சித் காயங்களுடன் தப்பிச்சென்றார். இந்நிலையில் கொலை தொடர்பாக தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் தரப்பினரை தேடி வந்தனர். இந்நிலையில் கொலையில் தொடர்புடைய விக்னேஷ்குமார்(23), ஆத்திகுளத்தைச் சேர்ந்த வின்சென்ட் செல்வராஜ்(24) ஆகிய இருவரும் மதுரை நீதித்துறை நடுவர் மன்றம் (எண் 2-இல்) வியாழக்கிழமை சரணடைந்தனர். இருவரையும் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதித்துறை நடுவர் பத்மநாபன் உத்தரவிட்டதை அடுத்து இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.