தமிழ் ஆட்சி மொழி செயலாக்கம்: இயக்குநர் ஆய்வு
By DIN | Published On : 14th June 2019 10:00 AM | Last Updated : 14th June 2019 10:00 AM | அ+அ அ- |

தமிழ் ஆட்சி மொழி செயலாக்கத்தை உறுதி செய்யும் வகையில் மதுரை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன் ஆய்வு செய்தார்.
தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தை அனைத்து அரசு அலுவலகங்களிலும் செயல்படுத்தும் முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம், மதுரை மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது.
உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் ப.அன்புச்செழியன், தமிழ் வளர்ச்சித் துறை சேலம் மண்டலத் துணை இயக்குநர் க.பொ.ராஜேந்திரன், வேலூர் மாவட்ட துணை இயக்குநர் ப.ராஜேஸ்வரி, திருப்பூர் மாவட்டத் துணை இயக்குநர் ப. விஜயலெட்சுமி மற்றும் உதவி இயக்குநர்களைக் கொண்ட குழு இந்த ஆய்வை மேற்கொண்டது.
கடந்த செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்களும் ஆட்சியர் அலுவலகத்திலும், புதன் மற்றும் வியாழக்கிழமை மதுரை மாநகாரட்சி அலுவலகத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதேபோல, மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆய்வு தொடங்கிய நிலையில், வெள்ளிக்கிழமையும் ஆய்வு நடைபெற உள்ளது. நிறைவு நாளான வெள்ளிக்கிழமை, ஆய்வில் கண்டறியப்பட்ட குறைபாடுகளைக் களைவதற்கான அறிவுரைகளை வழங்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.