பிளஸ் 1 மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
By DIN | Published On : 14th June 2019 09:58 AM | Last Updated : 14th June 2019 09:58 AM | அ+அ அ- |

தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்பில் இருந்தே மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த 5ஆம் தேதி வெளியிடப்பட்டன. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1,23,078 பேரில் 59,785 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 31,239 பேர் தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்கள்.
இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் பயின்ற 2 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 4 மாணவர்கள் மட்டுமே 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். ஆனாலும் ஒருவர் கூட மருத்துவச் சேர்க்கைக்கு தகுதி பெறும் அளவில் மதிப்பெண் பெறவில்லை.
1 முதல் பிளஸ் 2 வரை மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வில் அந்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் வினாக்கள் கேட்கப்பட்டால் அவர்களால் சுலபமாக கூடுதல் மதிப்பெண் பெற முடியும். ஆனால் 1 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின்கீழ் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வில் அதே பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படுவதால் அந்த மாணவர்கள் எளிதில் வெற்றி பெறுகின்றனர்.
தமிழக அரசு சார்பில் 412 நீட் பயிற்சி வகுப்புகள் மூலம் பயிற்சி அளித்தும் சொற்ப எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதே இதற்கு தீர்வாக அமையும். அதுவரை நீட் தேர்வுக்கு பிளஸ் 1 வகுப்பில் இருந்தே மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.