மதுரையில் ரஷிய கல்விக் கண்காட்சி தொடக்கம்: 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் பங்கேற்பு
By DIN | Published On : 14th June 2019 09:59 AM | Last Updated : 14th June 2019 09:59 AM | அ+அ அ- |

மதுரையில் ரஷிய கல்விக்கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. இதில் 10-க்கும் மேற்பட்ட ரஷிய நாட்டின் அரசு பல்கலைக்கழகங்கள் பங்கேற்றுள்ளன.
மதுரையில் ரஷிய அறிவியல் கலாச்சார மையம் மற்றும் "ஸ்டடி அப்ராட்' நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் இரு நாள் ரஷ்யக் கல்வி கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. மதுரை தெற்கு வெளிவீதியில் உள்ள தி மதுரை ரெசிடென்சி விடுதியில் நடைபெற்ற கண்காட்சி தொடக்க விழாவில், வோல்காகிரேடு ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் துணை முதல்வர் கோவ்ரிஜ் ன்யேக் டெனிஸ், அப்ராடு நிறுவனத்தின் இயக்குநர் சுரேஷ் ஆகியோர் பேசியது:
ரஷ்யாவில் ஆங்கில வழியில் மருத்துவம் பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 3 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டு வந்தது. தற்போது 2019-20 கல்வியாண்டில் 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு முன்தகுதி தேர்வுகள் எதையும் மாணவர்கள் எழுதத்தேவையில்லை. ஆனால் இந்திய மருத்துவக்கவுன்சில் விதிப்படி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மருத்துவம் படிக்க விரும்புவோர் "நீட்' தேர்வு தேறியிருக்க வேண்டும்.
இந்திய மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட 100அரசு மருத்துவ பல்கலைக்கழகங்கள் ரஷ்யாவில் உள்ளன. ரஷ்யாவில் கல்வி ஆண்டு வரும் செப்டம்பரில் தொடங்குகிறது. ரஷ்யாவில் பல்கலைக்கழகத்தில், ரஷ்ய மொழி வாயிலாக பயில்வதற்கு ஆண்டு ஒன்றுக்கு 2500-இல் இருந்து 4000 அமெரிக்க டாலர் வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆங்கில மொழியில் கல்வி பயில ஆண்டு ஒன்றுக்கு 3500 முதல் 6000 அமெரிக்க டாலர்கள் வரை கட்டணம் வசூலிக்கப்படும். ரஷ்யாவில் கல்வி கற்பது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 92822-21221 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றனர்.