மதுரை அரசு இசைக்கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 14th June 2019 09:55 AM | Last Updated : 14th June 2019 09:55 AM | அ+அ அ- |

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் படிக்க விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை மற்றும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என கல்லூரி முதல்வர் சி.டேவிட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கலை பண்பாட்டுத்துறை சார்பில் பசுமலையில் இயங்கிவரும் தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3 ஆண்டுகள் பட்டயப்படிப்பாக குரலிசை, வயலின், வீணை, நாதஸ்வரம், புல்லாங்குழல், மிருதங்கம், தவில், பரதம், நாட்டுப்புறக்கலை வகுப்புகளும், பிளஸ் 2 கல்வித்தகுதிக்கு மூன்றாண்டுகள் பட்டப்படிப்பு பி.ஏ. குரலிசை வகுப்புகளுக்கும் 25 வயதுக்கு உள்பட்டவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் இசைக் கலைமாமணி அல்லது பி.ஏ குரலிசை படித்தவர்களுக்கு ஓர் ஆண்டு இசை ஆசிரியர் பயிற்சி வகுப்புகளும் நடைபெறவுள்ளது. இதேபோல மாலை நேர வகுப்பாக பத்தாம் வகுப்பு படித்த 16 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் குரலிசை, வீணை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகிய வகுப்புகளும் எடுக்கப்படும். வகுப்புகள் வரும் ஜூன் 28 ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. மேலும் தொடர்புக்கு தொலைபேசி எண் - 0452 2370861, செல்லிடப் பேசி எண்கள் 94863 -74960, 96000-10904 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் சி.டேவிட் தமது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.