முதன்மைக் கல்வி அலுவலகம் முற்றுகை: இந்திய மாணவர் சங்கத்தினர் 13 பேர் கைது
By DIN | Published On : 14th June 2019 09:59 AM | Last Updated : 14th June 2019 09:59 AM | அ+அ அ- |

கல்வி உரிமைச்சட்ட இட ஒதுக்கீட்டில் முறைகேடுகளை களைய வலியுறுத்தி மதுரையில் முதன்மைக் கல்வி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினர் 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழகத்தில் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்படுவதில் முறைகேடுகளைக் களைய வலியுறுத்தியும், தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்
இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுலகம் முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையொட்டி உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் தல்லாகுளம் தபால் அலுவலகம் முன்பாக திரண்ட இந்திய மாணவர் சங்கத்தினர் மாநிலத்தலைவர் கண்ணன், மதுரை மாநகர் மாவட்டச் செயலர் வேல்தேவா, மத்தியக்குழு உறுப்பினர் ஜென்னி ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலகத்துக்குச் சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் முதன்மைக்கல்வி அலுவலகத்தின் வாயிற்கதவுகளை மூடி, சங்கத்தினரை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து சங்கத்தினர் முதன்மைக் கல்வி அலுவலகத்தின் வாயிலில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததை அடுத்து, போலீஸார் அவர்களை குண்டுக் கட்டாக தூக்கிச்சென்று வாகனத்தில் ஏற்றினர். இதனால் போலீஸாருக்கும், மாணவர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் போராட்டத்தில் ஈடுபட்ட 3 மாணவிகள் உள்பட 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.