மதுரை பல்நோக்கு மருத்துவமனை முழுமையாக செயல்படுவது எப்போது?

மதுரை அரசு மருத்துவமனையின் உயர் சிகிச்சை பல்நோக்குப் பிரிவு 2 மாதங்களில் முழுமையாக செயல்பட தொடங்கும்
Updated on
2 min read

மதுரை அரசு மருத்துவமனையின் உயர் சிகிச்சை பல்நோக்குப் பிரிவு 2 மாதங்களில் முழுமையாக செயல்பட தொடங்கும் என மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் கே.வனிதா தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தின் ஒருபகுதியில்,  ரூ.150 கோடி மதிப்பீட்டில் 4 ஏக்கரில்  மதுரை அரசு மருத்துவமனையின் உயர் சிகிச்சை பல்நோக்குப் பிரிவு கட்டப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு மருத்துவக் கழகம் சார்பில் மட்டும் ரூ.54 கோடிக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. கீழ்தளத்தில் ரத்த சேமிப்பு, மருந்தகம், குடல் இரைப்பை அறுவைச் சிகிச்சை வெளிநோயாளிகள் பிரிவு, சிறுநீரக அறுவைச் சிகிச்சை மற்றும் மருத்துவ வெளிநோயாளிகள்பிரிவு, தரைத் தளத்தில் குடல் இரைப்பை வெளிநோயாளிகள் பிரிவு, நரம்பியல் அறுவைச் சிகிச்சை மற்றும் மருத்துவ வெளிநோயாளிகள் பிரிவு, நரம்பியல் அறுவைச்சிகிச்சை மற்றும் மருத்துவ உள்நோயாளிகள் பிரிவு, முதல் தளத்தில் தீவிர சிகிச்சை பிரிவு, மயக்கவியல் பிரிவு, இரண்டாம் தளத்தில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை அறை, சிறுநீரகவியல் பிரிவு, மூன்றாம் தளத்தில் குடல் இரைப்பை அறுவைச் சிகிச்சை மற்றும் மருத்துவ உள்நோயாளிகள் பிரிவு, பெருங்குடல் உள்நோக்கு அறை என 5 தளங்கள் உள்ளன. இதில் மொத்தம் 480 படுக்கை வசதிகள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், ரத்த பரிசோதனை அறைகள் உள்ளன.  கடந்த 2014 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் தற்போது வரை நிறைவடையாமல் உள்ளன. குறிப்பாக தண்ணீர் வசதி, மின்தூக்கி அமைக்கும் பணிகள் மற்றும் 6 அறுவைச் சிகிச்சை அரங்குகளின் பணிகள், குப்பைத் தொட்டிகள் அமைக்கும் பணிகள்  முடிவடையாமல் உள்ளன. 
இந்நிலையில், கடந்த ஜனவரி  27 இல் தோப்பூரில் அமைய உள்ள "எய்ம்ஸ்' மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, மதுரை அரசு மருத்துவமனையின் உயர் சிகிச்சை பல்நோக்குப் பிரிவை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஆனால் கடந்த ஒரு மாதமாக அங்கு நரம்பியல், குடல் இரைப்பை, சிறுநீரக அறுவைச்சிகிச்சை மற்றும் மருத்துவ வெளிநோயாளிகள் பிரிவு மட்டுமே செயல்பட்டு வருகிறது. 
பல்நோக்கு மருத்துவமனை முழுமையாக செயல்படாமல் காலதாமதம் ஆவதற்கான காரணங்கள் குறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டதாவது: சமீபத்தில் 800 மருத்துவர்களுக்கு பணி உயர்வு மற்றும் பணியிடமாற்றம் வழங்கப்பட்டது. இதனால் மதுரை பல்நோக்கு மருத்துவமனைக்கான மருத்துவர்கள் பணியில் சேருவதற்கு தாமதமாகிறது. மேலும் செவிலியர்களின் பணி உயர்வு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் 160 செவிலியர்கள் பல்நோக்கு மருத்துவமனையில் சேருவதற்கு தாமதமாகிறது. கட்டுமானப் பணிகள் நிறைவடையாமல் உள்ளன. ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் மருத்துவனை கட்டுமானப் பணிகள் அனைத்தையும் முடித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்குமாறு ஒப்பந்ததாரரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடைகாலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் மாநகராட்சி லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யவேண்டும். மருத்துவமனை வளாகத்தின் வெளியே நுழைவாயில் பகுதியில் அவசர ஊர்திகள் ஆக்கிரமித்துள்ளன. அவற்றை அகற்றவும் நடவடிக்கை தேவை என்றனர்.
இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் கே.வனிதா கூறியது: மதுரை அரசு மருத்துவமனையின் உயர் சிகிச்சை பல்நோக்கு மருத்துவமனை பிரிவில் முதற்கட்டமாக நரம்பியல், குடல் இரைப்பை, சிறுநீரக அறுவைச்சிகிச்சை மற்றும் மருத்துவ வெளிநோயாளிகள் பிரிவு மட்டும் செயல்பட துவங்கியுள்ளது. மேலும் படிப்படியாக அனைத்து துறைகளும் முழுமையாக இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 2 மாதங்களில் பல்நோக்குப் பிரிவு முழுமையாக செயல்பட தொடங்கும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com