"7 பேர் விடுதலை முடிவை மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கக் கூடாது'
By DIN | Published On : 22nd March 2019 07:53 AM | Last Updated : 22nd March 2019 07:53 AM | அ+அ அ- |

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அமைச்சரவை முடிவை மத்திய அரசுக்கு அனுப்பியது தவறு என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.
சென்னையிலிருந்து வியாழக்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற அணியே தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிளிலும் வெற்றிபெறும். 18 சட்டப்பேரவைத் தொகுதியிலும் திமுக மகத்தான வெற்றி பெறும். இந்த ஆண்டு மாற்றத்திற்கான ஆண்டாகவே அமையும். மத்தியில் பாஜக அரசு அகற்றப்படும். தமிழகத்தில் ஊழல் ஆட்சியை அகற்றி திமுக ஆட்சி மலரும். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கனிமொழியை ஆதரித்து வெள்ளிக்கிழமை திருவைகுண்டம் முதல் விளாத்திகுளம், நாகலாபுரம் வரை பிரசாரம் செய்கிறேன். தொடர்ந்து ஏப்ரல் 16 ஆம் தேதி வரை தமிழகமெங்கும் பிரசாரம் செய்கிறேன் என்றார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை சாத்தியமில்லாதது என்ற சுப்பிரமணிய சுவாமியின் கருத்து குறித்து அவர் கூறியது :
7 பேரையும் விடுதலை செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை. அமைச்சரவை முடிவெடுத்து அறிவித்த பிறகு, அந்த விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்பியிருந்தால் அவர் தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டிருக்கிறார் என அர்த்தம். தமிழக அரசு அனுப்பியிருந்தால் அது 7 பேருக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...