மதுரை மக்களவைத் தொகுதியில் 28 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு:12 மனுக்கள் நிராகரிப்பு
By DIN | Published On : 28th March 2019 07:59 AM | Last Updated : 28th March 2019 07:59 AM | அ+அ அ- |

மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 28 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அமமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் உள்பட 36 வேட்பாளர்கள் 40 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
வேட்புமனுக்கள் பரிசீலனை அனைத்து வேட்பாளர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், மதுரை மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரான ச.நடராஜன், வேட்புமனுக்களைப் பரிசீலனை செய்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகர், பயிற்சி ஆட்சியர் பிரவீண் குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். பரிசீலனையின் முடிவில் மொத்த மனுக்களில் 28 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், வேட்பாளர்கள் கூடுதலாக தாக்கல் செய்த மனுக்கள், மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் மற்றும் 4 சுயேச்சைகளின் மனுக்கள் என 12 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பாளர்கள் விவரம்: டி.தவமணி (பகுஜன் சமாஜ்), வி.வி.ஆர்.ராஜ்சத்யன் (அதிமுக), சு.வெங்கேடசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), ப.அழகர் (தேசிய மக்கள் சக்தி கட்சி), எம்.அழகர் (மக்கள் நீதி மய்யம்), ஜெ.பாண்டியம்மாள் (நாம் தமிழர் கட்சி), நா.மாயழகன் (தமிழ்நாடு இளைஞர் கட்சி), சுயேச்சைகள் பா.அண்ணாதுரை, த.ராமசாமி, சு.கோபாலகிருஷ்ணன், மீ.கோபாலகிருஷ்ணன், வே.சண்முகம், கா.டேவிட் அண்ணாதுரை, ப.தர்மர், கா.நாகஜோதி, சே.பசும்பொன் பாண்டியன், தி.பாலச்சந்திரன், ம.பால்பாண்டி, மை.பிரிட்டோ ஜெய்சிங், க.பூமிநாதன், க.பூமிராஜன், த.முத்துக்குமார், ந.மோகன், கே.கே.ரமேஷ், ச.ராஜலிங்கம், மா.வெங்கேடசன், சு.வெங்கடேஸ்வரன், நா.ஷோபனா ஆகியோரது மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் பல்வேறு குறைபாடுகள் காரணமாக இந்திய குடியரசுக் கட்சி வேட்பாளர் பூ.நாகராஜா, சுயேச்சை வேட்பாளர்கள் பாரதி கண்ணம்மா, வேழவேந்தன், செ.ரவி ஆகியோரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
பிரதான வேட்பாளர்களின் மாற்று வேட்பாளர்களான சி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), பூமிநாதன் (அதிமுக), சுமதி (மநீம), ரேவதி (நாம் தமிழர்) ஆகியோர் மனுக்களும், அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெ.பாண்டியம்மாள், சுயேச்சை வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை (அமமுக) ஆகியோர் கூடுதலாக தாக்கல் செய்த தலா ஒரு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
அதிமுக -சிபிஎம் வாழ்த்து...: வேட்புமனு பரிசீலனையின் போது அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர். அவரவர் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொண்டதை அறிவித்தவுடன் வேட்பாளர்கள், அங்கிருந்து புறப்பட்டனர். அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் புறப்பட்டபோது அவரும் அதிமுக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யனும் கை குலுக்கி வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...