வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ஹார்விபட்டியில் கையெழுத்து இயக்கம்
By DIN | Published On : 28th March 2019 07:57 AM | Last Updated : 28th March 2019 07:57 AM | அ+அ அ- |

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகம் சார்பில் ஹார்விபட்டியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் 17-ஆவது மக்களவை தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே நாளில் மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் மற்றும் அழகர்கோயிலில் இருந்து வரும் கள்ளழகர் எதிர்சேவை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதையொட்டி வாக்களிக்கும் நேரத்தை இரவு 8 மணி வரை தேர்தல் ஆணையம் நீட்டிப்பு செய்துள்ளது.
இந்நிலையில் திருவிழாவிற்கு செல்லும் மக்கள் வாக்களிக்காமல் சென்று விடக்கூடாது என்றும், சுவாமியும் முக்கியம், வாக்களிப்பதும் முக்கியம் என்பது போன்ற வாசகங்களை அடங்கிய பேனர்களில் பொதுமக்களிடம் திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் நாகராஜன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மக்களவைத் தேர்தலில் தவறாமல் வாக்களிப்பேன் என உறுதியளிக்கும் விதத்தில் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் அழகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...