ஆயுதப்படை காவலர் பதவி உயர்வு வழக்கு: ஐஜி, 4 எஸ்பிகள் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 30th March 2019 07:25 AM | Last Updated : 30th March 2019 07:25 AM | அ+அ அ- |

காவலர் பதவி உயர்வு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தென் மண்டல ஐஜி, நெல்லை டிஐஜி, நெல்லை, குமரி , ராமநாதபுரம் எஸ்பிகள் ஆகியோர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் ஆயுதப்படை காவலர் கே.கோவிந்தசாமி, தாக்கல் செய்த மேல்முறையீடு மனு: குமரி மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்தார். இவருக்கு தற்போது ராமநாதபுரம் ஆயுதப்படைக்கு இடமாறுதல் வழங்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார். இடமாறுதலை எதிர்த்தும், பதவி உயர்வு தொடர்பாகவும் இரு வழக்குகளை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்பே தாக்கல் செய்தார்.
இந்த வழக்குகளில் இடமாறுதல், பதவி உயர்வு மற்றும் பணப்பலன்கள் வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ஒரு ஆண்டாக உயர்நீதிமன்ற உத்தரவுபடி இடமாறுதல், பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால், தென் மண்டல ஐஜி கே.பி.சண்முகராஜேஸ்வரன், நெல்லை டிஐஜி கபில்குமார் சி சரத்கார், நெல்லை எஸ்பி பி.வீ.அருண்சக்திகுமார், குமரி எஸ்பி ஸ்ரீநாத், ராமநாதபுரம் எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்ததார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தென் மண்டல ஐஜி, நெல்லை டிஐஜி, குமரி, ராமநாதபுரம், நெல்லை எஸ்பிக்கள் ஆஜராக வேண்டும் என்று
உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...