மதுரை அருகே வீடு புகுந்து தம்பதியைக் கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்த இருவருக்கு தலா 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் குசவன்குண்டு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராமன் மற்றும் அவரது மனைவி கீதா ஆகிய இருவரும் வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. 2010 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக பெருங்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சம்பவம் தொடர்பாக மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த சோனை(35) மற்றும் கார்த்திக் (28) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார். குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும், கூட்டுச் சதிக்கு தலா ஒரு ஆயுள் சிறைத் தண்டனை, கொலை செய்ததற்கு தலா இரண்டு ஆயுள் சிறைத் தண்டனை விதித்தார். இருவரும் தண்டனைக் காலத்தை தலா 30 ஆண்டுகள் குறையாமல் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.