கரடிக்கல் ஜல்லிக்கட்டு: ஆயிரம் மாடுகள், 750 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதிச் சீட்டு
By DIN | Published On : 05th May 2019 03:07 AM | Last Updated : 05th May 2019 03:07 AM | அ+அ அ- |

திருமங்கலத்தை அடுத்துள்ள கரடிக்கல் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க ஆயிரம் மாடுகள், 750 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதிச் சீட்டு (டோக்கன்) வழங்கப்பட்டுள்ளது.
கரடிக்கல்லில் அமைந்துள்ள ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க ஆயிரம் காளைகளுக்கு வெள்ளிக்கிழமையும், மாடுபிடி வீரர்களுக்கு சனிக்கிழமையும் அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்து.
அதன்பேரில், மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுபிடி வீரர்கள் அதிகாலை 5 மணிக்கே கரடிக்கல் வந்துவிட்டனர். ஆனால், பாதுகாப்புப் பணிக்கு போலீஸார் வராததால், மருத்துவக் குழுவினருக்கும், மாடுபிடி வீரர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதையடுத்து, சுமார் 1 மணிநேரம் மருத்துவப் பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டு, போலீஸார் வந்தவுடன் மீண்டும் தொடங்கப்பட்டது. இதில், 700-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கடும் வெயிலில் காத்திருந்து அனுமதிச் சீட்டு பெற்றுச் சென்றனர்.
இதில், கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் தனலெட்சுமி, செக்கானூரணி மருத்துவ அலுவலர் உமாராணி தலைமையிலான மருத்துவக் குழுவினர் உள்ளிட்டோர் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த ஜல்லிக்கட்டு விழாவுக்கு 800-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.