திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தல்: வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயார்ப்படுத்தும் பணி தொடக்கம்
By DIN | Published On : 05th May 2019 03:05 AM | Last Updated : 05th May 2019 03:05 AM | அ+அ அ- |

திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைத் தயார்ப்படுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 297 வாக்கு சாவடிகளில் மொத்தம் 1,420 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது அவசரத் தேவைக்காக இருப்பில் வைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள், இந்தஇடைத்தேர்தலில் பயன்படுத்தப்படுகின்றன.
இதையொட்டி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் பிற வட்டாட்சியர் அலுவலகங்களில் இருப்பில் வைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள் அனைத்தும், மதுரை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள பில்லர் ஹாலுக்கு சனிக்கிழமை கொண்டுவரப்பட்டன.
இந்த இயந்திரங்களில் ஏற்கெனவே மக்களவைத் தேர்தலுக்காக பதியப்பட்டிருந்த வாக்குச் சீட்டுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் முதல்நிலை பரிசோதனை செய்து முடிக்கப்படும். அதன்பின்னர், சீரான நிலையிலுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படும்.
தற்போது, வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொருத்தப்படும் வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மே 9 அல்லது 11 ஆம் தேதியில் திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்குச் சீட்டுகள் பொருத்தும் பணி நடைபெறும் என்று, தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.