திருமங்கலம் அருகேபசுமைக் குடில் அமைப்பதாகக் கூறி பெண்ணிடம் ரூ.90 லட்சம் மோசடி: வங்கி மேலாளர் உள்பட 8 பேர் மீது வழக்கு
By DIN | Published On : 05th May 2019 03:06 AM | Last Updated : 05th May 2019 03:06 AM | அ+அ அ- |

மதுரை அருகே பசுமைக் குடில் அமைத்து தருவதாகக் கூறி, பெண்ணிடம் ரூ. 90 லட்சம் மோசடி செய்த வங்கி மேலாளர் உள்பட 8 பேர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
மதுரை திருமங்கலம் அருகேயுள்ள லாலாபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி சுப்புலட்சுமி. இவர், வில்லூரில் உள்ள தனக்குச் சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தில் பசுமைக் குடில் அமைப்பதற்கு, கடந்த 2016-ஆம் ஆண்டு முயற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது, சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று சுப்புலட்சுமியை அணுகி, 10 ஆயிரம் சதுரடியில் பசுமைக் குடில் அமைப்பதாகவும், அதற்கு வங்கியில் கடனுதவியும் பெற்றுத் தருவதாகவும் கூறியுள்ளனர்.
அதையடுத்து, சுப்புலட்சுமியின் நிலத்தில் பசுமைக் குடில் அமைக்க, அவருக்கு திருமங்கலத்தில் உள்ள அரசுடைமை வங்கிக் கிளையிலிருந்து ரூ.90 லட்சம் கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. அத்தொகையை, தனியார் நிறுவனத்துக்கு வங்கி வழங்கியுள்ளளது. பணத்தைப் பெற்றுக்கொண்ட தனியார் நிறுவனம் 3 ஆண்டுகளாகியும் பசுமைக் குடில் அமைத்து தரவில்லையாம். எனவே, தனியார் நிறுவனம், வங்கி மேலாளர் உள்ளிட்டோரை சுப்புலட்சுமி அணுகி பசுமைக் குடில் குறித்து கேட்டுள்ளார். அப்போதுதான் அவர்கள் ஒன்றிணைந்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
இது குறித்து சுப்புலட்சுமி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால், அவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், குற்றப்பிரிவு போலீஸார் உடனடியாக வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டது.
அதன்பேரில், மதுரை மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார், வங்கி கிளை மூத்த மேலாளர் ராஜ்குமார், வங்கி கிளை மேலாளர் காளிதாஸ் பாண்டியன், தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஜான், மகாதேவன், அருள்முருகன் உள்பட 8 பேர் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.