வேத மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் கற்க நாளை முதல் இலவச பயிற்சி வகுப்பு
By DIN | Published On : 05th May 2019 03:05 AM | Last Updated : 05th May 2019 03:05 AM | அ+அ அ- |

மதுரை ஸ்ரீ மந் நாயகி ஸ்வாமிகள் வேத பாடசாலை சார்பில், மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் கற்பதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மே 6 ஆம் தேதி முதல் தொடங்குகிறது என சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை ஸ்ரீ மந் நாயகி ஸ்வாமிகள் ஆன்மிக இளைஞர் இயக்கம் மற்றும் வேத பாடசாலை சார்பில், கோடைகால விடுமுறையை முன்னிட்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
இதில், மாணவ, மாணவிகளுக்கு மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் மற்றும் இந்து சமய விளக்கம் உள்ளிட்டவை கற்றுத் தரப்படும்.
மதுரை சிஎம்ஆர் சாலையில் உள்ள ஸ்ரீ மந் நாயகி ஸ்வாமிகள் வேத பாடசாலையில் மே 6 முதல் 11 ஆம் தேதி வரை மாலை 5 முதல் 6 மணி வரை இந்த வகுப்புகள் நடைபெறும்.
இதில், சாந்தி மந்திரங்கள், நவக்கிரஹ காயத்ரி மந்திரங்கள், ஆஞ்சநேயர் ஸ்துதிகள், மஹாலட்சுமி ஸ்தோத்திரங்கள் உள்ளிட்டவை கற்பிக்கப்படும். பயிற்சியில், 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்பவர்களுக்கு இலவச புத்தகங்கள் மற்றும் பயிற்சி பெற்றமைக்கான சான்றிதழ் வழங்கப்படும் என, வேத மந்திர ஆசிரியர் ராமாச்சாரி தெரிவித்துள்ளார்.