காமராஜர் பல்கலை.யில் அடிப்படை ஆலோசனை திறன் பயிற்சி முகாம் நிறைவு
By DIN | Published On : 05th May 2019 03:05 AM | Last Updated : 05th May 2019 03:05 AM | அ+அ அ- |

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்த அடிப்படை ஆலோசனை திறன் குறித்த 5 நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.
பல்கலைக் கழக மாணவர்கள் ஆலோசனை மையத்தின் சார்பில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமை, பல்கலைக் கழகத் துணைவேந்தர் எம். கிருஷ்ணன் தொடக்கி வைத்தார். ஏப்ரல் 29 முதல் மே 3 ஆம் தேதி வரை நடந்த இந்த முகாமில், மனிதர்களின் குணங்களை புரிந்துகொள்ளுதல், அவர்களின் எண்ண ஓட்டங்களை மதிப்பிடுதல், மனநலம் பேணும் வழிமுறைகள், பொதுவான மனநலப் பிரச்னைகள் குறித்தும், அவற்றுக்கு எவ்வாறு ஆலோசனைகள் வழங்குவது என்பது குறித்தும் விளக்கப்பட்டது.
முகாமில், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திலுள்ள 20 மையங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் உள்பட 25 ஆலோசகர்கள் பயிற்சி பெற்றனர். இதில், எம்.எஸ். செல்லமுத்து மனநலம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் சி. ராமசுப்பிரமணியன், இயக்குநர் எம். கண்ணன், பேராசிரியர் ஜி. குருபாரதி, மருத்துவர்கள் ஆர். விக்ரம், ராஜாராம் சுப்பையா ஆகியோர் விளக்கமளித்தனர்.
பயிற்சியின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை, முகாமில் பங்கேற்ற ஆலோசகர்கள், மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள எம்.எஸ்.செல்லமுத்து மனநலம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, மனநலம் குறித்து ஆலோசனைகள் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், எம்.எஸ். செல்லமுத்து மனநலம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் சி.ராமசுப்பிரமணியன் பேசியது: மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதற்கு, முதலில் ஆலோசகர்கள் மாணவர்களிடம் அல்லது ஆலோசனை தேவைப்படுவோரிடம் நல்லுறவை பேணவேண்டும். அவர்களிடம் மனம்விட்டு பேசக் கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும்.
அவர்களுக்கு என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பதை புரிந்துகொண்டு, ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்க வேண்டும், பிரச்னை முற்றிய நிலையில் சரிசெய்ய நினைப்பது சரியாக இருக்காது என்றார்.
இதற்கான ஏற்பாடுகளை, மதுரை காமராஜர் பல்கலைக் கழக இதழியல் துறைத் தலைவர் எஸ். ஜெனிபா செய்திருந்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...