திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல்
By DIN | Published On : 05th May 2019 03:04 AM | Last Updated : 05th May 2019 03:04 AM | அ+அ அ- |

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என, அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணனை ஆதரித்து, தனக்கன்குளம், தென்பழஞ்சி, வடபழஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை பிரசாரம் செய்து பேசியதாவது: நாங்கள் தேர்தலுக்காக மக்களை சந்திப்பவர்கள் அல்ல. எந்தச் சூழ்நிலையிலும் மக்களோடு இருப்பவர்கள். தனக்கன்குளத்தில் பொதுக்கழிப்பிடம் மூடிக் கிடக்கிறது. அருகே உள்ள நான்குவழிச் சாலையை கடக்கும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. குடிநீர் பிரச்னை உள்ளது. கால்நடை அதிகம் உள்ள இப்பகுதியில் கால்நடை மருத்துவமனை வேண்டும். இங்குள்ள உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
திமுக ஆட்சி அமைந்தவுடன், உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். நாங்கள் வாக்குறுதி அளித்தால் அதனை உடனடியாக நிறைவேற்றுவோம்.
கிராமங்களில் பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாததற்குக் காரணம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததே. எனவே, மே 23 ஆம் தேதி அறிவிக்கப்படும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத் தேர்தலுக்கான முடிவுகளை அடுத்து, திமுக ஆட்சி அமைப்பது உறுதி. திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் வேலையாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்பதை உறுதி அளிக்கிறேன் என்றார்.
இப்பிரசாரத்தின்போது, ஆண் குழந்தைகளுக்கு கருணாநிதி, மாறன் என்றும், பெண் குழந்தைகளுக்கு தமிழ்ச்செல்வி, செம்மொழி என்றும் பெயர் சூட்டினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...