நெசவாளர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பது அதிமுக அரசுதான்
By DIN | Published On : 05th May 2019 03:06 AM | Last Updated : 05th May 2019 03:06 AM | அ+அ அ- |

இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் நெசவாளர்களைக் காத்து வருவது அதிமுக அரசு தான் என, அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை நாகமலை புதுக்கோட்டையில், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணி அலுவலகத்தை துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம் மற்றும் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் ஆகியோர் சனிக்கிழமை திறந்து வைத்தனர். இதில், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலர் வி.வி. ராஜன்செல்லப்பா, திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் உதயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர், கே.பி. முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியது: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நெசவாளர்கள் மீது திடீரென பாசம் ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்காக ஒரு நாடகத்தை அவர் நிகழ்த்தியுள்ளார். ஆனால், நெசவாளர்களைக் காப்பது அதிமுக அரசு தான்.
நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன. கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் வழங்கப்படுகிறது.
இதன்மூலம், 1.20 லட்சம் கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் பயன்பெறுகின்றன. விசைத்தறி நெசவாளர்களுக்கு மாதந்தோறும் 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில், 1.49 லட்சம் விசைத்தறி நெசவாளர்கள் பயன்பெறுகின்றனர்.
ஆனால், திமுக ஆட்சியில் நெசவாளர்களுக்காக எந்தவொரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.
அதிமுக அரசு மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்றார்.
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பிரசாரம்: திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். முனியாண்டியை ஆதரித்து, ஐராவதநல்லூர் பகுதியில் சனிக்கிழமை பிரசாரம் செய்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியது:
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே. போஸ், 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் திடீரென இறந்தபோதிலும், தொகுதியில் எவ்வித தொய்வுமின்றி பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து இடங்களிலும் குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு, ஒரே ஆண்டில் ரூ.38 கோடிக்கு சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேர்தலின்போது மட்டுமே எதிர்க் கட்சியினர் மக்களைச் சந்திக்க வருகின்றனர். அவர்களுக்கு, இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றார்.
பிரசாரத்தில், கதர் வாரிய அமைச்சர் க. பாஸ்கரன், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் மற்றும் சிவகங்கை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...