"அரசியல் கட்சியினர் பொய் வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றுகின்றனர்'
By DIN | Published On : 15th May 2019 06:39 AM | Last Updated : 15th May 2019 06:39 AM | அ+அ அ- |

அரசியல் கட்சியினர் பொய் வாக்குறுதிகள் அளித்து மக்களை ஏமாற்றுகின்றனர் என நடிகை கோவை சரளா தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து நடிகை கோவை சரளா தோப்பூர், நிலையூர் கைத்தறிநகர், ஹார்விபட்டி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்து பேசியது: மக்களிடம் வாக்குக்கு பணம் கொடுத்து விட்டு அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கின்றனர்.
பணத்தின் மீது மக்களுக்கு ஆசையைத் தூண்டிவிட்டு அடிமையாக்கி வருகின்றனர்.
இவ்வளவு காலம் ஆட்சி செய்தவர்கள் சாலை வசதிகள் கூட செய்து தரவில்லை. நாங்கள் அரசியல்வாதி, கிடையாது. எப்பொழுதும் மக்களோடு குடும்பத்தினராக உள்ளோம்.
எங்களுடைய வேட்பாளர் மக்களுக்காக செயல்படவில்லை எனில் உடனே ராஜிநாமா செய்யப்படும்.
தேர்தலில் வெற்றிபெற வாக்குறுதிகள் கொடுக்கும் அரசியல் கட்சியினர் ஏதும் செய்யாமல், தங்களது குடும்பத்தினர்களுக்கே சொத்து சேர்க்கின்றனர். ஆட்சியில் இருக்கும்போது ஏதும் செய்யாமல் தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளைத் தந்து மக்களை ஏமாற்றுகின்றனர் என்றார்.