"பாஜகவின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை'
By DIN | Published On : 15th May 2019 06:39 AM | Last Updated : 15th May 2019 06:39 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலுக்காக பாஜக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்தார்.
திமுக வேட்பாளர் பா.சரவணணை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் ஹார்விபட்டி, பாண்டியன் நகர், திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்குசேகரித்தனர்.
அப்போது கே.வி.தங்கபாலு பேசியது: திமுக ஆட்சிக்கு வந்தால் அதன்தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதி அனைத்தும் மிக விரைவில் நிறைவேற்றப்படும். பிரதமர் மோடிக்கு, தமிழகத்தில் அதிமுக அரசு துணைபோகிறது. பாஜகவின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை. வருகிற 23 ஆம் தேதி தேர்தல் முடிவுக்கு பிறகு மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி பிரதமராகவும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராகவும் பொறுப்பேற்றவுடன், நீட் தேர்வு ரத்து, விவசாய கடன் தள்ளுபடி, ஏழை எளிய மக்களுக்கு மாதம் ரூ .6,000 உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றார். அவருடன் பகுதி செயலர் உசிலை சிவா, வட்டச் செயலர் சுந்தர், கவிஞர் ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.