"மே 23 இல் திமுகவுக்கு ஏமாற்றமே கிடைக்கும்'
By DIN | Published On : 15th May 2019 06:41 AM | Last Updated : 15th May 2019 06:41 AM | அ+அ அ- |

தேர்தல் முடிவு வெளியாகும் மே 23 ஆம் தேதி திமுகவுக்கு ஏமாற்றமே கிடைக்கும் என தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி விளாச்சேரியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, அமமுக இரு கட்சிகளும் பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்குவதன் மூலம் வெற்றியைப் பெற்று விடலாம் என கனவு காண்கின்றன. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களால் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மதங்களை தொடர்புப்படுத்தி பிரசாரம் செய்வது கண்டிக்கத்தக்கது. அதிலும் ஒரு மதத்தின் மீது கமல்ஹாசனின் தனிப்பட்ட கருத்து தவறானது. மதக் கலவரத்தை தூண்டும் விதமாக யார் கூறினாலும், வேற்றுமையை மறந்து தமிழக மக்கள் ஒற்றுமையாக உள்ளனர். கொள்கை, லட்சியங்கள், மக்களுக்கு செய்யக் கூடிய நன்மைகள், திட்டங்கள் குறித்து பிரசாரம் செய்வது தான் நல்லது. ஜாதி, மதங்களை அவதூறாக பேசி பிரசாரத்தில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. திமுக சந்தர்ப்பவாத கட்சி. "பூனைக்கும் தோழன், பாலுக்கும் காவல்' என்ற பழமொழியின் அடிப்படையில் தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்.
சந்திரசேகர ராவ் சந்திப்பு குறித்து மே 23ஆம் தேதிக்குப் பிறகு, விவரம் அறிவிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது விமர்சனத்துக்குரியது. "ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள்' என்ற நிலையில் தான் திமுக கூட்டணி இருக்கிறது. மே 23- க்குப் பிறகு திமுகவுக்கு ஏமாற்றமே கிடைக்கப் பெறும் என்றார்.