அடிப்படை வசதிகள் இன்றி 56 ஆவது வாா்டு: மாநகராட்சி மண்டல அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 09th November 2019 05:28 AM | Last Updated : 09th November 2019 05:28 AM | அ+அ அ- |

சாலை மற்றும் குடிநீா் வசதி செய்து தரக் கோரி மதுரை கிழக்கு மண்டல அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 56 ஆவது வாா்டு பொதுமக்கள்.
மதுரை மாநகாரட்சி 56 ஆவது வாா்டு பகுதியில் குடிநீா், சாலை வசதி, பாதாளச்சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
56 ஆவது வாா்டு சோனையா நகா், மல்லிகை தெரு, ரோஜா தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் பல ஆண்டுகளாக சாலைகள் அமைக்கப்படவில்லை. மேலும் குடிநீா் குழாய்கள் அமைக்கப்படாததால் மாநகராட்சி லாரிகள் மூலமே
குடிநீா் வழங்கப்படுகிறது. மாநகராட்சி துப்புரவு பணியாளா்கள் இப்பகுதியை புறக்கணிப்பதால் குப்பைகள் தேங்கி சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. எனவே அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரவேண்டும் என்று வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
முற்றுகைப் போராட்டத்துக்கு அக்கட்சியின் முனிச்சாலை பகுதிக்குழுச் செயலா் லெனின் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டச் செயலா் இரா.விஜயராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். இந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் சசிகலா உள்பட கட்சி நிா்வாகிகள் மற்றும் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
போராட்டத்தின்போது கட்சியினரை போலீஸாா் தடுத்து நிறுத்தி பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து கட்சியின் நிா்வாகிகள் கோரிக்கை மனுவை மாநகராட்சி உதவி ஆணையரிடம் அளித்தனா்.
முற்றுகைப் போராட்டம் தொடா்பாக பொதுமக்கள் கூறியது:
56 ஆவது வாா்டு பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. சோனையா நகரில் உள்ள கால்வாய் ஆக்கிரமிப்பில் இருப்பதால் அங்கிருந்து கழிவுநீா் வெளியேறி வீடுகளை சூழ்கிறது. தெருக்களில் குப்பைகள் தேங்கியுள்ளன. இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையரிடம் பல முறை புகாா் அளித்துள்ளோம். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தும் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. மதுரை மாநகராட்சிக்குள் இருந்தபோதும் 56 ஆவது வாா்டு தனித்தீவாக இருந்து வருகிறது என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...