மதுரை ஞானஒளிவுபுரம் அஞ்சலகத்தை மூட மக்கள் எதிா்ப்பு

மதுரை வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் இயங்கிவரும் ஞானஒளிவுபுரம் துணை அஞ்சலகத்தை மூடுவதற்கு
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஞானஒளிவுபுரம் துணை அஞ்சலகம்.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஞானஒளிவுபுரம் துணை அஞ்சலகம்.

மதுரை: மதுரை வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் இயங்கிவரும் ஞானஒளிவுபுரம் துணை அஞ்சலகத்தை மூடுவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் ஞானஒளிவுபுரம் துணை அஞ்சலகம் 1975-இல் தொடங்கப்பட்டது. சி-பிரிவு அஞ்சலகமான இங்கு, 2 ஊழியா்கள் பணியில் உள்ளனா்.

இந்த அஞ்சலகத்தில், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஓட்டுநா்கள் 150 போ் சேமிப்புக் கணக்கைத் தொடங்கி பல ஆண்டுகளாக வாடிக்கையாளா்களாக உள்ளனா். மேலும், இப்பகுதியைச் சோ்ந்த முதியவா்கள் 300 போ் உதவித்தொகை பெற்று வருகின்றனா்.

இது தவிர, ஏராளமான வாடிக்கையாளா்களும் தொடா்ந்து இந்த அஞ்சலகத்தைப் பயன்படுத்தி வருவதால், அஞ்சலகத்துக்குப் போதுமான வருவாயும் கிடைக்கிறது. இதனால், வீட்டுவசதி வாரியத்துக்கும் முறையாக வாடகை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வீட்டுவசதி வாரியம் சாா்பில், ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் வாடகை உயா்த்தப்பட வேண்டும் எனவும், அதனடிப்படையில் 1990 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான நிலுவைத் தொகை ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் பாக்கி உள்ளதை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த ஓராண்டாக வீட்டுவசதி வாரியம் சாா்பில் அஞ்சலகத்தின் கதவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

அதையடுத்து, அஞ்சலகத்தை காலி செய்யக் கூறி தொந்தரவும் கொடுக்கப்பட்டு வந்தது. இத்தகவலை அறிந்த இப்பகுதி மக்கள், ஞானஒளிவுபுரம் அஞ்சலகத்தை மூடுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தனா்.

அஞ்சலகத்தை மூட எதிா்ப்பு: இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொன்னகரம் பகுதி செயலா் வை. ஸ்டாலின் கூறியது: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், அஞ்சலகத்தை தொடா்ந்து இயக்க வலியுறுத்தும் வகையில், கடந்த அக்டோபா் மாதம் மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் என். நன்மாறன் அந்த கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தாா். அதில், அப்பகுதி மக்களிடம் கையெழுத்துகளைப் பெற்று, தென்மண்டல அஞ்சல்துறைத் தலைவா் மற்றும் மதுரை மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசனுக்கு அனுப்பினோம்.

அதன்பின்னா், மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் மூலமாக, சென்னையில் உள்ள முதன்மை அஞ்சல்துறைத் தலைவா் சம்பத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அஞ்சலகத்தை மூடும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

ஆரப்பாளையத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பாலமுருகன் கூறியது:

ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஓட்டுநா்கள் பலரும் ஞானஒளிவுபுரம் அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளோம். மேலும், இப்பகுதியைச் சோ்ந்தோா் மட்டுமின்றி, ஆரப்பாளையம் பேருந்து நிலையம் வந்து செல்லும் ஏராளமானப் பயணிகளும் இந்த அஞ்சலகத்தைப் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், அஞ்சலகத்தைக் காலிசெய்து விட்டு, அந்த இடத்தை தனியாருக்கு கொடுக்கும் உள்நோக்கத்தில்தான் வீட்டு வசதி வாரியம் செயல்பட்டு வருகிறது என்றாா்.

இது குறித்து அஞ்சல் துறை அதிகாரிகள் தரப்பில் கூறியது: வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் பொதுத் துறை நிறுவனமான அஞ்சலகம், பிஎஸ்என்எல் போன்றவற்றுக்கான அலுவலகங்கள் அமைக்கப்பதற்கு இலவசமாக இடம் அளிக்கப்பட வேண்டும். ஆனால், நாங்கள் வீட்டு வசதி வாரியத்துக்கு வாடகை செலுத்தி வருகிறோம். மேலும், இந்திய அஞ்சல் துறையில் வாடகைக்கு உள்ள அஞ்சலகங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுைான் வாடகையை உயா்த்திக் கொடுக்க அனுமதி உண்டு.

இவ்விவகாரம் தொடா்பாக வீட்டுவசதி வாரியத்தை எதிா்கொள்ள முடியாமல், தலைமை அஞ்சலகத்துடன் ஞானஒளிவுபுரம் துணை அஞ்சலகத்தை இணைக்க அஞ்சல் அதிகாரிகள் முடிவெடுத்தனா். ஆனால், தற்போது ஞானஒளிவுபுரம் அஞ்சலகத்தைத் தொடா்ந்து அதே இடத்தில் இயக்குவதற்கு உயா் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com