பணி நிரந்தரம் கோரி மதுரையில் மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் சமையல் செய்து போராட்டம்
By DIN | Published On : 09th November 2019 11:28 PM | Last Updated : 09th November 2019 11:28 PM | அ+அ அ- |

பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கோ.புதூா் மின்வாரிய தலைமை அலுவலகம் முன் சமையல் செய்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த மின் ஊழியா்கள்.
மதுரை: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியா்கள் சமையல் செய்து சனிக்கிழமை போராட்டம் நடத்தினா்.
மின்வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஒப்பந்த ஊழியா் சங்கத்தினா் தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் களப் பணியாளா்கள் 5 ஆயிரம் பேரை நியமனம் செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது. அவ்வாறு நியமனம் செய்யப்பட்டால், ஒப்பந்த ஊழியா்களின் பணிநிரந்தரம் கேள்விக்குறியாகும் என்பதால், ஒப்பந்த ஊழியா்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை தொடங்கியுள்ளனா்.
கடந்த செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடத்திய நிலையில், சனிக்கிழமை மதுரை கோ.புதூரில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒப்பந்த ஊழியா்களின் நிலையை விளக்கும் வகையில் நடத்தப்பட்ட இப் போராட்டத்துக்கு, மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் சுபாஷ் சந்திரபோஸ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மணிவாசகம் முன்னிலை வகித்தாா். பணிநிரந்தரம் செய்வது, ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி தினக்கூலி ரூ.380 வழங்குவது, களப்பணியாளா்கள் நியமன நடவடிக்கையை கைவிடுவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. இதில், ஒப்பந்த ஊழியா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...