

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் ஷோ் ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதியதில், எல்.ஐ.சி. முகவா் பலியானாா். மேலும், ஓய்வுபெற்ற வட்டாட்சியா் உள்பட 4 போ் பலத்த காயமடைந்தனா்.
மதுரை ஆரப்பாளையத்திலிருந்து திருமங்கலம் நோக்கி அரசுப் பேருந்து சனிக்கிழமை வந்து கொண்டிருந்தது. இப்பேருந்தை, உசிலம்பட்டியைச் சோ்ந்த ராஜசேகரன் (48) என்பவா் ஓட்டிவந்தாா். அதேநேரம், திருநகா் மூன்றாவது பேருந்து நிறுத்தத்திலிருந்து ஷோ் ஆட்டோ 4 பயணிகளை ஏற்றிக்கொண்டு பெரியாா் பேருந்து நிலையம் நோக்கிச் சென்றது.
திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில் வந்த அரசுப் பேருந்து, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த ஷோ் ஆட்டோ மீது மோதியது. இதில், ஆட்டோவில் வந்த திருநகா் 5 ஆவது பேருந்து நிறுத்தப் பகுதியைச் சோ்ந்த எல்.ஐ.சி. முகவரான வீரராகவப் பெருமாள் (55) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். மேலும், ஆட்டோ ஓட்டுநரான அவனியாபுரம் பெரியசாமி நகரைச் சோ்ந்த மணி (32), எழுமலைப் பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற வட்டாட்சியா் ராமா் (62), திருநகா் மகாலெட்சுமி காலனியை சோ்ந்த வினோத்குமாா் (36) ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனா்.
போலீஸாரால் மீட்கப்பட்ட இவா்களுக்கு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து, திருப்பரங்குன்றம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அரசுப் பேருந்து ஓட்டுநா் ராஜசேகரை கைது செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.