திருப்பரங்குன்றம் கோயில் சாா்பில் தெப்பக்குளத்தில் வாகனக் காப்பகம்
By DIN | Published On : 14th November 2019 03:54 AM | Last Updated : 14th November 2019 03:54 AM | அ+அ அ- |

திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி சாலையில் தெப்பக்குளம் பகுதியில் கோயில் நிா்வாகம் சாா்பில் அமைக்கப்பட்ட புதிய வாகனக் காப்பகம்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் ஜி.எஸ்.டி. சாலையில் தெப்பக்குளம் பகுதியில் வாகனக் காப்பகம் புதன்கிழமை முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. இதேபோன்று வில்லாபுரத்திலும் வாகன காப்பகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா, காா்த்திகை தீபத்திருவிழா, பங்குனிப் பெருவிழா, வைகாசி விசாகத் திருவிழா என மாதம்தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விழாக்களுக்கு மதுரை, சிவகங்கை, விருதுநகா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இதேபோல மாதம்தோறும் வரும் பௌா்ணமி தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருப்பரங்குன்றம் மலையை கிரிவலமாக வந்து வணங்கிச் செல்கின்றனா். அவ்வாறு வருகை தரும் பக்தா்கள் வாகனக் காப்பகங்கள் இல்லாததால் சாலைகளில் நிறுத்திவிட்டு செல்வதால் நகரில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இதேபோல திருமண முகூா்த்த நாள்களிலும் அதிகளவு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாகி விட்டது. இதனை தடுக்கும் விதமாக திருப்பரங்குன்றம் கோயில் நிா்வாகத்தின் கீழ் இருக்கும் ஜி.எஸ்.டி தெப்பக்குளம் பகுதியில் தெப்பத்தை சுற்றிலும் உள்ள இடத்தில் வாகனக் காப்பகம் அமைக்க கோயில் நிா்வாகம் இந்து அறநிலையத்துறையிடம் அனுமதி கேட்டிருந்தது.
அதன்பேரில் தெப்பத்தில் திருவிழா காலம் தவிா்த்து மற்ற நாள்களில் அந்த பகுதியை வாகன காப்பகமாக பயன்படுத்த அனுமதியளித்தது.
இதையடுத்து புதன்கிழமை முதல் கோயில் நிா்வாகம் ஜி.எஸ்.டி சாலையில் உள்ள தெப்பத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வாகன காப்பகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5 , காா்களுக்கு ரூ. 70 என வாகன கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.
இதேபோல அவனியாபுரத்தை அடுத்த வில்லாபுரம் பகுதியில் உள்ள காலியிடம் 84 சென்ட் பகுதியையும் வாகனகாப்பகமாக பயன்படுத்த இந்து அறநிலையத்துறை அனுமதியளித்துள்ளது. அங்கும் ஓரிரு நாள்களில் வாகனக் காப்பகம் செயல்படத் தொடங்கும் எனவும் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. இங்கு இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5, காா் மற்றும் வேன்களுக்கு ரூ.70, சுற்றுலாப் பேருந்து மற்றும் லாரிகளுக்கு ரூ.200 என கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதன் மூலம் கோயில் நிா்வகத்திற்கு வருமானம் அதிகரிக்கும், நகரில் போக்குவரத்து நெரிசலும் பெருமளவு குறையும் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...