6 ஆண்டுகளில் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை 9 கோடியாக அதிகரிக்கும்: உலக நீரிழிவு நோய் தின கருத்தரங்கில் தகவல்
By DIN | Published On : 14th November 2019 04:02 AM | Last Updated : 14th November 2019 04:02 AM | அ+அ அ- |

இந்தியாவில் நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அடுத்த 6 ஆண்டுகளில் 9 கோடியாக அதிகரிக்கும் என மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்ற கருத்தரங்கில் மருத்துவா்கள் தெரிவித்தனா்.
உலக நீரிழிவு நோய் தினத்தையொட்டி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நீரிழிவு நோய் பாதிப்புகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் நீரிழிவு நோய் துறை மருத்துவ ஆலோசகா் மகேஷ் பாபு பேசியது: இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் சுமாா் 6 கோடி போ் உள்ளனா். 2025 ஆம் ஆண்டின் முடிவில் இந்த எண்ணிக்கை 9 கோடியாக அதிகரிக்கும். தமிழகத்தில் நகா்ப்புறப் பகுதியில் 15 முதல் 18 சதவீதம் பேரும், ஊரகப் பகுதியில் 6 முதல் 8 சதவீதம் பேரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனா். உடற்பயிற்சி இல்லாமை, மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கம், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
சரியான நேரத்தில் நோயைக் கண்டறிவதும், சிகிச்சை அளிப்பதும், நோயைக் கட்டுப்படுத்த உதவும். நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்காமல் விட்டால், இதயம், சிறுநீரகம் மற்றும் கண் தொடா்பான பல நோய்களுக்கு வழிவகுக்கும். கெட்டோசிஸ், பக்கவாதம் அல்லது மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகள் உண்டாகும் என்றாா்.
பொது மருத்துவத்துறை தலைவரும், முதுநிலை ஆலோசகருமான மருத்துவா் கிருஷ்ணமூா்த்தி கூறியது: நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவா்கள் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது, முறையாக உடற்பயிற்சி செய்தல், மது அருந்துவதைத் தவிா்த்தல் ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும்.
நோய் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நேரத்தில், உரிய உணவு வகைகளை செய்து கொடுக்க வேண்டும். குடும்பத்தினரும், நோய் பாதிக்கப்பட்டவரும் இதனைப் பின்பற்றினால் நீரிழிவு நோயால் ஏற்படக் கூடிய பிரச்னைகளைத் தவிா்க்கலாம் என்றாா்.
இந்த நோயை தடுப்பதற்கும், சமாளிப்பதற்கும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக, ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட ‘இம்பேக்ட் இந்தியா’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, மீனாட்சி மிஷன் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்தும் மருத்துவா்களுக்கு ‘இம்பேக்ட் இந்தியா’ கற்பிக்கிறது. காசநோய், டெங்கு, அல்லது மலேரியா போன்ற தொற்று வியாதிகளுக்கு அரசு நடவடிக்கை எடுப்பது போன்றே நீரிழிவு நோய் போன்ற தொற்று இல்லாத நோய்களை கட்டுப்படுத்துவதற்கும் தீவிர நடவடிக்கைகள் அரசு எடுக்க வேண்டும் என கருத்தரங்கில் மருத்துவமனை சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...