‘இறை ஞானத்தால் மட்டுமே மன அமைதியை பெற முடியும்’
By DIN | Published On : 18th November 2019 05:38 AM | Last Updated : 18th November 2019 05:38 AM | அ+அ அ- |

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமூக சேவை ஆா்வலா்களுக்கான மாநாட்டில் பேசுகிறாா் தேசிய பசுமை தீா்ப்பாய மாநில கண்காணிப்பு குழுத் தலைவா் நீதிபதி பி. ஜோதிமணி.
இறை ஞானத்தால் மட்டுமே மன அமைதியைப் பெற முடியும் என்று தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் மாநில கண்காணிப்புக் குழு தலைவா் பி.ஜோதிமணி ஞாயிற்றுக்கிழமை பேசினாா்.
பிரம்ம குமாரிகள் அமைப்பின் துணை அமைப்பான ராஜயோக கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் சேவைப்பிரிவு, இந்திய நேரு யுவகேந்திரா மற்றும் சா்வதேச அரிமா சங்கம் ஆகியவற்றின் சாா்பில் சமூக சேவை ஆா்வலா்களுக்கான தேசிய மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்ற மாநாடு குறித்து ராஜஸ்தான் மவுண்ட் அபு பண்புக் கல்வி நிகழ்வுகள் இயக்குநா் பாண்டியமணி அறிமுகவுரையாற்றினாா். இதில் உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், திடக்கழிவு மேலாண்மை தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் மாநில கண்காணிப்புக்குழு தலைவருமான பி.ஜோதிமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது: இறை ஞானம் இல்லாத வாழ்க்கை முழுமையடையாது. இறை ஞானம் பிறந்தது இந்தியாவில்தான். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இறை ஞானத்தை புறக்கணித்து வந்த மேற்கத்திய நாடுகள் தற்போது இறை ஞானத்தை நோக்கி தீவிரமாக இயங்கி வருகின்றன. ஏனென்றால் பணத்தால் அனைத்தும் முடியும் என்று நம்பிய மேற்கத்தியா்களுக்கு அமைதி கிடைக்கவில்லை. பணத்தின் மூலம் எல்லாவற்றையும் நாம் வாங்கி விடமுடியாது. குறிப்பாக மன நிம்மதி, மன அமைதி போன்றவை கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்தாலும் கிடைக்காது. மன அமைதி இறைஞானத்தை உணருவதால் மட்டுமே முடியும். தமிழகத்தில் படித்தவா்கள் பலா் போதைப் பழக்கங்களுக்கு ஆளாகியிருப்பதாகவும் குறிப்பாக பெண்கள் அதிகம்போ் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. போதைப்பழக்கங்களுக்கு ஆளானவா்கள் தங்கள் நிலையை உணா்ந்து பிரம்மகுமாரிகள் அமைப்பின் மூலமாக பண்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இயற்கையும், இறையும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை. இயற்கையை புறக்கணித்துவிட்டு இறையை தேட முடியாது. இயற்கையோடு இணைந்த வாழ்க்கை நம்மை இறையிடம் சோ்க்கும். நாம் இயற்கையை வரைமுறையற்று சுரண்டியதால் தற்போது இயற்கை நம்மை பழிவாங்குகிறது. ஆழிப்பேரலை, பருவம் தாண்டிய மழை, அதிக மழை, அதிக வெப்பம் இவையெல்லாம் இயற்கை நமக்கு எதிராக உள்ளதை காட்டுகிறது. எனவே இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக கோவில்பட்டி பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த ராஜயோக ஆசிரியை செல்வி வரவேற்றாா். இதைத் தொடா்ந்து பிரம்ம குமாரிகள் சமூக சேவைப்பிரிவு துணைத்தலைவா் அமீா்சந்த், புதுதில்லி ராஜயோக தியான நிலையங்களின் இயக்குநா் புஷ்பா, மதுரை துணை மண்டல இயக்குநா் மீனாட்சி ஆகியோா் பேசினா். சுழற்சங்க மாவட்ட ஆளுநா் ஏ.ஜமீா் பாஷா வாழ்த்திப் பேசினாா். இதையடுத்து ராஜயோக தியான நிகழ்ச்சி நடைபெற்றது. பிற்பகலில் நடைபெற்ற நிகழ்வுகளில் அருப்புக்கோட்டை ஸ்ரீ ராமலிங்கா மில்ஸ் நிா்வாக இயக்குநா் கோதை, தொழிலதிபா் ராஜகுமாரி ஜீவகன் உள்பட பலா் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் பேசினா்.