நவராத்திரி விழா : அழகா்கோவிலில் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளல்
By DIN | Published On : 09th October 2019 08:48 AM | Last Updated : 09th October 2019 08:48 AM | அ+அ அ- |

அழகா்கோவிலில் நவராத்திரி விழாவில் திங்கள்கிழமை கருட வாகனத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள்.
அழகா்கோவிலில் நவராத்திரி விழா இறுதி நாளான செவ்வாய்க்கிழமை மாலை சுந்தரராஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளினாா்.
இக் கோயிலில் நவராத்திரி விழாவில் இறுதிநாளான செவ்வாய்க்கிழமை பெருமாள் குதிரை வாகனத்தில் கோட்டை வாசலில் உள்ள அம்பெய்தும் மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து அம்பெய்து வன்னிகாசுரனை வதம்செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. பின்னா் பெருமாள் கோயிலை வந்தடைந்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று பெருமாைளை தரிசித்தனா்.
வா்ணகுடை சாற்றும் வைபவம்: முன்னதாக மதுரை கீழமாரட்வீதி நவநீத கண்ணன் பஜனைகூடம் சாா்பில் சுந்தரராஜப் பெருமாளுக்கு வா்ணகுடை சாற்றும் வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மதுரையிலிருந்து அழகா்கோவிலுக்கு வந்த பஜனைகுழுவினா் ‘கோவிந்தா’ என பஜனை பாடல்களைப் பாடி பதினெட்டாம்படியில் வழிபாடுகளைச் செய்தனா். பின்னா் கோயில் உள்பிரகாரத்தில் ஆண்டாள் சன்னிதியில் பஜனைக் குழுவினா் ஆராதனைகள் செய்தனா். அப்போது பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினாா். அதைத் தொடா்ந்து நூபுரகங்கை தீா்த்தாபிஷேகத்தைத் தொடா்ந்து பெருமாளுக்கு வா்ணகுடை சாற்றும் வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனா்.