கல்லூரி மாணவர்களுடன் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. கலந்துரையாடல்
By DIN | Published On : 01st September 2019 03:14 AM | Last Updated : 01st September 2019 03:14 AM | அ+அ அ- |

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் பா. சரவணன் தலைமையில் கல்லூரி மாணவர்களுடன் தொகுதி குறித்து கலந்துரையாடல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநகர் 5 ஆவது பஸ் நிறுத்தம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் திருப்பரங்குன்றம் சட்டப்பேவை தொகுதிக்கு உள்பட்ட கல்லூரி மாணவர்களுடன் தொகுதி பிரச்னைகள் குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணனிடம் கல்லூரி மாணவர்கள் திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிக்கு பாதாள சாக்கடை திட்டம், திருப்பரங்குன்றம் பகுதியில் விளையாட்டு மைதானம், திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்கும் விதத்தில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள கண்மாய்களில் அதன் பெயர், பரப்பளவு உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தகவல் பலகை வைக்க வேண்டும். மேலும் மாநகராட்சி விஸ்தரிப்பு பகுதிகளான எஸ்ஆர்வி நகர், பாம்பன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருவிளக்கு அமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.
இதுகுறித்து அந்தந்த துறைகளைச் சார்ந்த அதிகாரிகளைச் சந்தித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் சரவணன் மாணவர்களுக்கு உறுதியளித்தார். கூட்டத்தில் திருநகர் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் இந்திராகாந்தி, திமுக தகவல் தொழில்நுட்பபிரிவு தொகுதி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், வட்ட அமைப்பாளர் மதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் மரக்கன்றுகள் வழங்கினார்.