மன ஆரோக்கியத்துக்கு புத்தக வாசிப்பு அவசியம்
By DIN | Published On : 01st September 2019 03:14 AM | Last Updated : 01st September 2019 03:14 AM | அ+அ அ- |

உடல் ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சி முக்கியமானதைப் போல, மன ஆரோக்கியத்துக்கு புத்தக வாசிப்பு அவசியம் என்று, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் வலியுறுத்தினார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் 14 ஆவது புத்தகத் திருவிழாவில், சனிக்கிழமை அவர் பேசியது:
தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவனிடம் சீடரைப் போல இருந்தவரும், தினமணி நாளிதழ் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்தவரும், தமிழில் முதன்முதலாக ஐஏஎஸ் தேர்வு எழுதிய அதிகாரியுமான பாலகிருஷ்ணன், தொல்லியல் குறித்து 1,100 பக்கங்களில் எழுதியுள்ள புத்தகம் ஆங்கிலத்திலும், தமிழிலும் விரைவில் வெளிவர உள்ளது. தமிழக வரலாற்றை எத்தனையோ பேர் பதிவு செய்திருந்தாலும், இந்த நூல் மிக முக்கியமான வரலாற்றுப் பதிவாக இருக்கும்.
ஆதிச்சநல்லூர், கீழடி, அரிக்கமேடு, கொற்கை, தொண்டி உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலமாக தமிழக வரலாற்றை விளக்குகிறார். சங்க இலக்கியங்களில் உள்ள பல பெயர்கள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பிரான்ஸ், ரஷியா போன்ற நாடுகளில் இன்றும் பயன்பாட்டில் உள்ளன. அவற்றை இந்நூல் வழியாக அறிய வைத்துள்ளார்.
கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து மன்னர், சிறந்த நூல்களைச் சேகரித்து அதற்கு மனநல மருத்துவ நிலையம் எனப் பெயரிட்டுள்ளார். உடல் ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சி முக்கியமானதைப் போல, மன ஆரோக்கியத்துக்கு புத்தக வாசிப்பு முக்கியம் என்பதை உணர்ந்து, அவ்வாறு செய்துள்ளார்.
உலக மொழிகளில் ஆதி மொழி தமிழ். அது, தலைசிறந்த மொழியாக இருக்க மனதில் எழும் விஷயங்களை, மண் சார்ந்த விஷயங்களை, கலாசாரஅழகியலோடு, உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்ததே காரணம். தமிழ் படைப்புகளில் பண்பாடு, கலாசாரம், பழக்கவழக்கங்கள் அனைத்தும் தனித்தன்மையோடு தமிழ் இனத்துக்குச் சொந்தமானதாக உள்ளன.
புத்தகங்களுக்கும் மனிதருக்குமான உறவு என்பது அறிவுசார்ந்த உறவாகும். புத்தகங்கள் நமக்கு நம்மையே அடையாளம் காட்டக் கூடியதாக இருக்கின்றன.
சட்ட மேதை அம்பேத்கர் ஒருமுறை வெளிநாடு சென்றிருந்தபோது, உங்களை எங்கே தங்க வைக்கலாம் எனக் கேட்டதற்கு, நூலகம் அருகில் தங்கவேண்டும் என்றார். தூக்குமேடை செல்லும் வரை புத்தகத்துடன் பகத்சிங் இருந்துள்ளார். புத்தகங்களோடு நெருங்கிய உறவில் இருப்பவர்களே எனதருகில் இருக்கவேண்டும் என ரோமானிய மன்னர் சீசர் கூறினார்.
திரைப்படங்களில் நடிப்பதில் கிடைக்கும் வருவாயை வைத்து என்ன செய்வீர்கள் எனக் கேட்டதற்கு, அதில் முதல் பாதியை புத்தகங்கள் வாக்குவதற்காக செலவு செய்வேன் என்றார் சார்லி சாப்ளின். மூலதனம் நூலை கார்ல் மார்க்ஸ் எழுதிய பிறகே, நாட்டு மக்களுக்குப் பொருளாதாரச் சிந்தனை மாறியது.
இதேபோல், உலகமே நமது திருக்குறளை உலகப் பொதுமறை எனக் கொண்டாடுகிறது. நம் வாழ்வில் அடைய வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை புத்தங்கள் மூலமாக அறியலாம். புத்தகச் சாலைகள் திறக்கப்படும்போது, சிறைச் சாலைகள் மூடப்படும். நாம் அனைவரும் புத்தகங்களை நேசிக்க வேண்டும். மானுடம் சிறக்க படைப்புகள், படைப்பாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.