காரில் கஞ்சா கடத்திய பெண் கைது: கணவர் உள்பட 2 பேர் தப்பியோட்டம்
By DIN | Published On : 11th September 2019 07:41 AM | Last Updated : 11th September 2019 07:41 AM | அ+அ அ- |

மதுரை அருகே காரில் கஞ்சா கடத்திய பெண்ணை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். அப்பெண்ணின் கணவர் உள்பட 2 பேர் தப்பியோடிவிட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர போலீஸார் திங்கள்கிழமை, உசிலம்பட்டி - மதுரை பிரதான சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். மதுரை நோக்கி வந்த காரை போலீஸார் நிறுத்தியபோது, காரிலிருந்த 2 பேர் தப்பியோடினர். இதையடுத்து, காரிலிருந்த பெண்ணை பிடித்து போலீஸார் விசாரித்தினர்.
இதில், பிடிபட்ட பெண் தத்தனேரி பகுதியைச் சேர்ந்த வளர்மதி(37) என்பதும், தப்பிச் சென்றவர்கள், வளர்மதியின் கணவர் கணேசன் மற்றும் அச்சம்பத்து மணிகண்டன் என்பதும், இவர்கள் காரில் கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது.
இதுகுறித்து காவல் சார்பு- ஆய்வாளர் சொக்கநாதன் அளித்த புகாரின் பேரில் உசிலம்பட்டி நகர போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து வளர்மதியை கைது செய்து, அவரிடமிருந்த 2.500 கிலோ கஞ்சா, ரூ. 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
மேலும் 3 பேர் கைது: உசிலம்பட்டி தாலுகா போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புளியம்பட்டி சந்திப்பில் கஞ்சா விற்ற கீரிப்பட்டியைச் சேர்ந்த பூமி(65), பூச்சிப்பட்டியில் கஞ்சாவிற்ற மருதம்பட்டியைச் சேர்ந்த வேலு(70), கீரிப்பட்டியில் கஞ்சா விற்ற, அதே பகுதியைச் சேர்ந்த பசுபதி(60) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.200 கிலோ கஞ்சா மற்றும் ரூ. 4 ஆயிரத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.