தூத்துக்குடி ரௌடி கொலை வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஒருவர் சரண்
By DIN | Published On : 11th September 2019 07:44 AM | Last Updated : 11th September 2019 07:44 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் வீடு புகுந்து ரௌடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார்.
தூத்துக்குடி கே.வி.கே நகரைச் சேர்ந்தவர் சிந்தா சரவணன்(40). தூத்துக்குடியில் பிரபல ரௌடியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, திருட்டு, வழிப்பறி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையிலிருந்து சிந்தா சரவணன் ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி வீட்டில் சிந்தா சரவணன் தூங்கிக் கொண்டிருக்கும்போது, 5 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து அவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பியது. இதுகுறித்து தூத்துக்குடி மத்திய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முனியசாமி(43) மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில் (எண் 1) சரணடைந்தார்.