வேலையில்லா சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்புப் பயிற்சி
By DIN | Published On : 11th September 2019 07:43 AM | Last Updated : 11th September 2019 07:43 AM | அ+அ அ- |

வேலையில்லா சிறுபான்மையினருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள மத்திய காலணி பயிற்சி நிலையத்தில் இலவச திறன் வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் த.சு.ராஜசேகர் வெளியிட்டுள்ள செய்தி: படித்து வேலையில்லாத சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் உதவியுடன் திறன் வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் செயல்படும் மத்திய காலணி பயிற்சி நிலையத்தில் 46 நாள்களுக்குப் பயிற்சி நடைபெறும். ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் தலா ரூ.1,534 உதவித் தொகை வழங்கப்படும். உண்டு, உறைவிடக் கட்டணம் வழங்கப்படமாட்டாது.
18 முதல் 55 வயதுக்கு உள்பட்ட சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தோர் பயிற்சியில் சேரலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பயிற்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல், வாலாஜாபாத்தில் உள்ள மத்திய காலணி பயிற்சி நிலையத்தில் செப்டம்பர் 20 ஆம் தேதி காலை 10 மணி முதல் நடைபெறுகிறது.
வருமானச் சாண்றிதழ், ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ் ஆகியவற்றுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
பயிற்சி தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.