மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு 53 பேர் அனுமதி: 6 பேருக்கு டெங்கு பாதிப்பு
By DIN | Published On : 29th September 2019 04:15 AM | Last Updated : 29th September 2019 04:15 AM | அ+அ அ- |

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள 53 பேரில், குழந்தை உள்பட 6 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாக, மருத்துவமனை முதன்மையர் கே. வனிதா சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டெங்கு பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சனிக்கிழமை நிலவரப்படி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 4 தினங்களில் 18 குழந்தைகள் உள்பட 53 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒரு
குழந்தை உள்பட 6 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனை முதன்மையர் கே. வனிதா கூறியது:
மருத்துவமனைக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் வருகை அதிகரித்துள்ளது. டெங்கு பாதிப்பு பரவலாக இருப்பதால், அனைவருக்கும் டெங்கு பாதிப்புக்கான அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போதைய நிலவரப்படி, மருத்துவமனையில் ஒரு குழந்தை உள்பட 6 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டெங்குவுக்கு என தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், கொசு வலையுடன் கூடிய படுக்கை வசதிகள், தேவையான தடுப்பு மருந்துகள், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.
டெங்குவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்களும் டெங்கு பாதிப்பு ஏற்படாமல் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளை தண்ணீர் தேங்காமல், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வது அவசியம். காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகி உரிய பரிசோதனைகளை செய்து கொள்ளவேண்டும் என்றார்.