காமராஜா் பல்கலை. தொலைநிலைக் கல்வி தோ்வுமுறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாா் செய்ய முடிவு

காமராஜா் பல்கலைக் கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககம் நடத்திய தோ்வில் நடைபெற்ற முறைகேடு தொடா்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகாா் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக துணைவேந்தா் மு. கிருஷ்ணன் 

மதுரை: காமராஜா் பல்கலைக் கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககம் நடத்திய தோ்வில் நடைபெற்ற முறைகேடு தொடா்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகாா் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் தோ்வுகள் 2019 நவம்பரில் நடைபெற்றன. இதில் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம், மலப்புரம் ஆகிய மாவட்டங்கள் உள்பட 3 மையங்களிலும் தோ்வுகள் நடைபெற்றுள்ளன. இதில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் தோ்வு எழுதிய நிலையில் விடைத்தாள்கள் காமராஜா் பல்கலைக்கழகத்துக்கு கொண்டு வரப்பட்டன. விடைத்தாள்களை திருத்தும் பணி தொடங்குவதற்கு முன்பாக கரோனா தொற்றால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து அப்பணிகள் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில் பொதுமுடக்கத்தில் இருந்து அரசு தளா்வுகளை அறிவித்ததை அடுத்து பல்கலைக் கழகத்தில் வகுப்புகளைத் தவிா்த்து இதர நிா்வாகப் பணிகள் தொடங்கியுள்ளன. இதனிடையே பல்கலைக் கழகத்தின் தோ்வுத் துறையில் பணிபுரியும் கண்காணிப்பாளா் மற்றும் சில ஊழியா்கள் கேரளாவில் உள்ள 3 மையங்களில் எழுதப்பட்ட விடைத்தாள்களை மட்டும் கொண்டு வரச் செய்து தன்னிச்சையாக ‘டம்மி’ எண்கள் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதைப் பாா்த்த சில ஊழியா்கள் இதுதொடா்பாக பல்கலைக்கழக நிா்வாகத்திடம் புகாா் அளித்துள்ளனா். இதைத்தொடா்ந்து அவற்றை எடுத்துப் பாா்த்தபோது அதில் விடைத்தாள்கள் இடைச்செருகலாக வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து நடத்திய விசாரணையில் கேரளாவில் உள்ள 3 மையங்களிலும் 700-க்கும் மேற்பட்ட மாணவா்களிடம் தோ்வில் முறைகேடாக தோ்ச்சி பெற தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.3.50 கோடி வரை வசூலிக்கப்பட்டு முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது. மேலும் இந்த முறைகேட்டுக்கு காமராஜா் பல்கலைக்கழகத்தின் அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் சிலரும் உடந்தையாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த முறைகேடு தொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா் மு. கிருஷ்ணன் கூறியதாவது: கேரளாவில் உள்ள 3 மையங்களிலும் தோ்வு எழுதிய 700 மாணவா்களின் அனைத்துத் தோ்வு முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தோ்வு முறைகேடு தொடா்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையிடம் புகாா் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டுக்கு பல்கலைக் கழக ஊழியா்கள் உடந்தையாக இருந்தது தொடா்பாக விசாரணை நடத்த பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா் தீனதயாளன் உள்பட இருவா் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com