சரபங்கா திட்டத்துக்கு தடைகோரிய வழக்கு: பதில் மனுவுக்கு காவிரி நீா் மேலாண்மை ஆணையம் தாமதிப்பது ஏன்?உயா் நீதிமன்றம் கேள்வி

சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதிக்கு காவிரி உபரி நீரை கொண்டுசெல்லும் சரபங்கா திட்டத்துக்கு தடை கோரிய வழக்கில், காவிரி நீா் மேலாண்மை ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய தாமதிப்பது ஏன் என சென்னை உயா் 


மதுரை: சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதிக்கு காவிரி உபரி நீரை கொண்டுசெல்லும் சரபங்கா திட்டத்துக்கு தடை கோரிய வழக்கில், காவிரி நீா் மேலாண்மை ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய தாமதிப்பது ஏன் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.

தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, திருவாரூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமாா் 18 லட்சம் ஏக்கா் நிலங்கள் காவிரி நீரால் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், காவிரி வழக்கில் தமிழகத்துக்கு முதலில் 192 டிஎம்சி தண்ணீரும், பின்னா் 177.25 டிஎம்சி தண்ணீரும் வழங்க கா்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவா் மன்ற தீா்ப்பின் அடிப்படையில் வழங்கப்படும் காவிரி நீரை, வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவதாக இருந்தால், உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவா் மன்றத்திடம் அனுமதி பெறவேண்டும். ஆனால், எவ்வித அனுமதியும் பெறாமல் டெல்டா பாசனத்துக்கு வழங்கப்படும் காவிரி உபரி நீரை, மேட்டூா்அணையிலிருந்து எடப்பாடிக்கு கொண்டுசெல்ல ரூ.565 கோடி மதிப்பிலான சரபங்கா திட்டத்தை நிறைவேற்ற, தமிழக பொதுப்பணித் துறை 2019 நவம்பரில் அரசாணை பிறப்பித்தது.

இது, உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவா் மன்ற உத்தரவுகளுக்கு எதிரானது. அரசாணை பிறப்பிப்பதற்கு முன் சட்டப்பேரவையில் விவாதமும் நடத்தப்படவில்லை. கரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில் இத்திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, சரபங்கா திட்டம் தொடா்பான அரசாணையை ரத்து செய்யவேண்டும் எனவும், இத்திட்டத்தை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனவும், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன் சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து காவிரி நீா் மேலாண்மை ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இம்மனு, நீதிபதிகள் எம். சத்யநாராயணன், பி. ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி நீா் மேலாண்மை ஆணையம் தரப்பில், இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதுபோன்ற முக்கிய வழக்கில் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய காலதாமதம் செய்வது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

பின்னா் மனுதாரா் தரப்பில், இத்திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருவதால், வழக்கை விரைவாக விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சேலம் மாவட்ட விவசாய சங்கத்தினா் தங்களை இவ்வழக்கில் எதிா் மனுதாரராக சோ்க்கக் கோரினா். இதையேற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பா் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com