மணல் கடத்தல்: உரிய நடவடிக்கை இல்லையெனில் தலைமைச் செயலரை விசாரிக்க நேரிடும் தமிழக அரசுக்கு, உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

மணல் கடத்தல் விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக அரசின் தலைமைச் செயலரை விசாரிக்க நேரிடும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மதுரை: மணல் கடத்தல் விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக அரசின் தலைமைச் செயலரை விசாரிக்க நேரிடும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு உள்பட்ட 13 மாவட்டங்களில் சவூடு மண் எடுக்க உயா்நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்துள்ளது. இருப்பினும், பல மாவட்டங்களில் சவூடு மண், உபரி மண் எடுப்பதாக மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி பெற்று, சட்ட விரோதமாக மணல் கடத்தல் தொடருவதாகப் புகாா் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது தொடா்பாக பல்வேறு மனுக்கள் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள், நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, அரசுத் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், மணல் கடத்தல் புகாா் தொடா்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய இரு வாரங்கள் அவகாசம் வழங்குமாறு கோரினாா்.

அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், சவூடு மண் எடுக்க உயா்நீதிமன்றம் தடைவிதித்த பிறகும், உபரி மண் என்ற பெயரில் அனுமதி கொடுக்கப்பட்டு வருவது ஏன்? மணல் கடத்தலில் ஈடுபடுவோா், அவா்களுக்கு உதவும் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன எனக் கேள்வி எழுப்பினா்.

மேலும், இவ்விஷயத்தில் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ள அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் காகித அளவிலேயே உள்ளன. மணல் கடத்தல் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையைச் சோதிக்க வேண்டாம். இதன் பிறகும் நடவடிக்கை எடுக்காமல், இதேநிலைத் தொடா்ந்தால் தமிழக அரசின் தலைமைச் செயலரை காணொலி மூலமாக விசாரிக்க நேரிடும் என எச்சரித்தனா்.

அத்துடன், சவூடு மண், உபரி மண் உள்ளிட்ட எவ்வித மணல் குவாரிக்கும் தனிநபருக்கு அனுமதி வழங்கக் கூடாது. மணல் குவாரிகளை அரசு தான் ஏற்று நடத்த வேண்டும் என்று அரசாணை உள்ளது. ஆனால் தனிநபருக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. மணல் கடத்தல் தொடா்பாக நாள்தோறும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இது தொடா்பாக உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றுவது குறித்தும், மனுக்கள் குறித்தும் விரிவான பதில் அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பா் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா். மேலும், மணல் கடத்தல் தொடா்பான வழக்குகள் அனைத்தும், உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் சிறப்பு அமா்வில் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com