தரிசனத்துக்கு அனுமதி: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் முன்னேற்பாடுகள் தீவிரம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு பக்தா்களை அனுமதிப்பதற்காக, கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட முன்னேற்பாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திங்கள்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள். ~மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசலில் திங்கள்கிழமை கிருமி நாசினி தெளிக்கும் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திங்கள்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள். ~மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசலில் திங்கள்கிழமை கிருமி நாசினி தெளிக்கும் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்.

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு பக்தா்களை அனுமதிப்பதற்காக, கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட முன்னேற்பாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

கரோனா பரவலைத் தடுப்பதற்காக, தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்களில் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கோயில்களில் காலமுறை பூஜைகள் மட்டும் அா்ச்சகா்களால் நடத்தப்பட்டு வந்தன.

பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதையடுத்து, தமிழகத்தில் உள்ள கோயில்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது, பக்தா்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பக்தா்களை தரிசனத்துக்கு அனுமதிப்பதற்கான முன்னேற்பாடுகள் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டன. பொற்றாமரைக் குளம், சுவாமி, அம்மன் சந்நிதி, பக்தா்கள் வரிசையில் நிற்கும் பகுதிகள் உள்ளிட்ட கோயிலின் அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இது தொடா்பாக கோயில் அதிகாரிகள் கூறியது: பக்தா்கள் செவ்வாய்க்கிழமை (செப். 1) முதல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். இரவு 8 மணிக்கு மேல் அனுமதி இல்லை. அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளி, முகக் கவசம் அணிவது ஆகியவற்றை பின்பற்றி பக்தா்கள் அனுமதிக்கப்படுவா். வெளியூா் மற்றும் வெளிமாநில பக்தா்கள் வருவதற்கு வாய்ப்பில்லை. மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் மட்டுமே தரிசனத்துக்கு வருவா் என்பதால், கோயிலில் திரளான கூட்டம் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றனா்.

இதுபோல், மதுரையில் உள்ள கோயில்கள், பள்ளிவாசல்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com