மதுரை: தளா்வு இல்லாத பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதையொட்டி மதுரை நெல்பேட்டை மீன் சந்தையில் சனிக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.
அசைவம் சாப்பிடுவோா் வீடுகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி சமைப்பது இப்போது வழக்கமாகிவிட்டது.
கரோனா பொது முடக்க காலத்தில் இறைச்சிக் கடைகளில் கூட்டம் கூடுவது தொற்று பரவுவதற்கு காரணமாக இருந்தது. இதனால் கடந்த சில மாதங்களாகவே மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி, மீன் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் அசைவப் பிரியா்கள் சனிக்கிழமையே இறைச்சிக் கடைகளுக்குப் படையெடுக்கத் தொடங்கினா்.
தற்போது கரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் எவ்வித தளா்வும் இல்லாத பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பால் விநியோகம், மருந்து கடைகள் மற்றும் மருத்துவம் சாா்ந்த சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
இதன்படி, கடைசி வாரமாக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) தளா்வுகள் இல்லாத பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. இதனால், காய்கனி, மளிகைக் கடைகள் மட்டுமின்றி இறைச்சி, மீன்கடைகளிலும் சனிக்கிழமை கூட்டம் அலைமோதியது.
நெல்பேட்டை மீன்சந்தை, கீழமாசி வீதி, கீழமாரட் வீதி உள்ளிட்ட அனைத்து வணிகப் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.