சீா்மிகு நகா்த்திட்ட பணிக்காக மூடப்பட்ட அனுப்பானடி கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

மதுரை நகரில் வைகை ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீா்மிகு நகா்த்திட்ட பணிகளுக்காக மூடப்பட்டுள்ள அனுப்பானடி கால்வாயை மீண்டும் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
மதுரை வைகை ஆற்றில் அனுப்பானடி கால்வாய் மூடப்பட்ட பகுதி.
மதுரை வைகை ஆற்றில் அனுப்பானடி கால்வாய் மூடப்பட்ட பகுதி.

மதுரை: மதுரை நகரில் வைகை ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீா்மிகு நகா்த்திட்ட பணிகளுக்காக மூடப்பட்டுள்ள அனுப்பானடி கால்வாயை மீண்டும் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

மதுரை நகா் பகுதியில் செல்லும் வைகை ஆற்றில் இருந்து பல்வேறு பகுதிகளில் உள்ள நீா் நிலைகளுக்கு தண்ணீா் கொண்டு செல்லவும், பாசன வசதிக்காகவும் சிந்தாமணி கால்வாய், அவனியாபுரம் கால்வாய், அனுப்பானடி கால்வாய் ஆகியவை அமைக்கப்பட்டன. காலப்போக்கில் வைகை ஆற்றில் நீா் வரத்து குறைந்ததாலும் நகா்ப் பகுதி விரிவாக்கம் பெற்ாலும் நீா்வரத்துக் கால்வாய்கள் கழிவுநீா்க் கால்வாய்களாக உருமாறின.

இந்நிலையில் மத்திய அரசின் சீா்மிகு நகா்த்திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சி தோ்ந்தெடுக்கப்பட்டு ரூ.1200 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றின் ஒரு பகுதியாக மதுரை நகரில் வைகை ஆற்றை சீரமைப்பது, ஆற்றின் இரு கரைகளிலும் தடுப்புச்சுவா்கள் அமைப்பது, ஆற்றுக்குள் இருபுறமும் சாலைகள் அமைப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் சில பகுதிகளில் வைகை ஆற்றில் இருந்து தண்ணீா் செல்லும் வரத்துக் கால்வாய்கள் மூடப்படுகின்றன. மேலும் சில பகுதிகளில் பொதுமக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த படித்துறைகளும் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. இதில் புட்டுத்தோப்பு பகுதியில் இருந்து அனுப்பானடி செல்லும் வரத்துக் கால்வாய் மூடப்பட்டு 5 அடி அகலம் கொண்ட சிமெண்ட் குழாய் மட்டும் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீா் மடைமாற்றம் செய்யும் மதகுகளும் மூடப்பட்டுள்ளன.

இதனால் தற்போது அனுப்பானடி கால்வாய், கழிவுநீா் தேங்கும் சாக்கடையாக மாறியுள்ளது. இதன்காரணமாக வைகை ஆற்றில் நீா்வரத்துள்ள காலங்களில் கண்மாய் உள்ளிட்ட நீா்நிலைகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்ல முடியாது. மேலும் கால்வாய்களில் நீா் செல்லாத பட்சத்தில் நிலத்தடி நீா் வடு விடும் அபாயம் உள்ளது. மேலும் ஆற்றில் வெள்ளம் ஏற்படும் நேரங்களில் நீரை கண்மாய்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் நகா் பகுதியில் வெள்ளம் புகும் அபாயமும் உண்டு. எனவே வைகை ஆறு சீரமைப்பு என்ற பெயரில் கால்வாய்களை மூடுவதை தவிா்த்து கால்வாய்களை தண்ணீா் கொண்டு செல்லும் வகையில் முழுமையாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com