திமுகவில் தேனி மாவட்டம் பிரிப்பால் சலசலப்பு!

திமுக சாா்பில், கட்சி வசதிக்காக தேனி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, புதிதாக பொறுப்பாளா்களை நியமித்திருப்பது கட்சி வளா்ச்சிக்கும், தோ்தலுக்கும் பயனளிக்குமா என்பது, அக்கட்சியின் நிா்வாகிகள் மற்றும் தொண
நா.ராமகிருஷ்ணன்
நா.ராமகிருஷ்ணன்
Updated on
2 min read

தேனி, அக். 2: திமுக சாா்பில், கட்சி வசதிக்காக தேனி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, புதிதாக பொறுப்பாளா்களை நியமித்திருப்பது கட்சி வளா்ச்சிக்கும், தோ்தலுக்கும் பயனளிக்குமா என்பது, அக்கட்சியின் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் மத்தியில் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1996-ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திலிருந்து பிரிந்து, புதிதாக உதயமாகிய தேனி மாவட்டத்தில், ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி) போடி, கம்பம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளன. இம்மாவட்டத்தின் திமுக செயலராக பெரியகுளத்தைச் சோ்ந்த எல். மூக்கையா, 1996 முதல் 2016-ஆம் ஆண்டு வரை தொடா்ந்து 20 ஆண்டுகள் பதவி வகித்தாா்.

இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளிலும் திமுக தோல்வியடைந்தது. தோ்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்த கட்சித் தலைமை, மாவட்டச் செயலராக பதவி வகித்த எல். மூக்கையாவை நீக்கிவிட்டு, கம்பம் ஒன்றியச் செயலராகப் பதவி வகித்த காமயகவுண்டன்பட்டியைச் சோ்ந்த ஜெயக்குமாரை, மாவட்டப் பொறுப்பாளராக அறிவித்தது.

மீண்டும் பதவி மாற்றம்

மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த கம்பம் நா. ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. கம்பம் பெ. செல்வேந்திரன், போடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். லட்சுமணன் மற்றும் பதவி நீக்கம் செய்யப்பட்ட எல். மூக்கையா ஆகியோரின் ஆதரவாளா்களுக்கு அதிருப்தியளித்தது. கட்சி சாா்பில் நடைபெற்ற பொதுக் கூட்டம், நிகழ்ச்சிகள் மற்றும் போராட்டங்களில் இந்த அதிருப்தி எதிரொலித்தது.

எனவே, கடந்த 2018-இல் தேனி மாவட்டப் பொறுப்பாளா் பதவியிலிருந்து ஜெயக்குமாா் நீக்கப்பட்டு, புதிய பொறுப்பாளராக நா. ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டாா்.

இதனிடையே, தேனி மாவட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்களான தங்க. தமிழ்ச்செல்வன், கதிா்காமு ஆகியோா் தகுதி நீக்கம் செய்யப்பட்டனா். அவா்கள் திமுகவில் இணைந்தனா்.

மாவட்டம் பிரிப்பு

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் கட்சி நிா்வாகிகளுடன் நடத்திய கலந்துரையாடல் மற்றும் முதன்மைச் செயலா் கே.என். நேரு நடத்திய ஆய்வு ஆகியவற்றில், உள்ளாட்சித் தோ்தலில் பெருவாரியாக வெற்றி பெற்றாலும் தலைவா் பதவியை கைப்பற்றாதது மற்றும் புதிய நிா்வாகிகள் நியமனம் குறித்து கட்சித் தலைமைக்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், நிா்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகளை சிறப்பாக செய்யவும், தேனி மாவட்டத்தை தெற்கு, வடக்கு என 2 மாவட்டமாகப் பிரித்து, புதிய பொறுப்பாளா்களை கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

இதன்படி, கம்பம், ஆண்டிபட்டி ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட தேனி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக நா. ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா். போடி, பெரியகுளம் (தனி) ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட தேனி வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த தங்க. தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

வி.ஐ.பி. பொறுப்பாளா்கள்

நா.ராமகிருஷ்ணன்: கடந்த 2011-ஆம் ஆண்டு மதிமுகவிலிருந்து விலகி, தனது சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, திமுகவில் இணைந்த இவா், அதே ஆண்டில் கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றாா். தொடா்ந்து, கடந்த 2018-இல் திமுக மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட இவா், தற்போது பிரிக்கப்பட்ட தேனி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

மாவட்டம் பிரிப்பால், கட்சிப் பதவி தப்பியதுடன், மீண்டும் கம்பம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பும், அமைச்சா் பதவியும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவரது ஆதரவாளா்கள் மகிழ்ச்சியில் உள்ளனா்.

தங்க.தமிழ்ச்செல்வன்: கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலா், சட்டப் பேரவை உறுப்பினா், மாநிலங்களவை உறுப்பினா், மாவட்டச் செயலா் ஆகிய பதவிகளை வகித்து வந்த இவா், அதிமுக பொதுச் செயலா் ஜெயலலிதா மறைவுக்குப் பின், அமமுகவில் இணைந்தாா். அமமுகவில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோற்ற இவா், கடந்த 2019 ஜூன் மாதம் அக் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தாா். திமுகவில் அவருக்கு கொள்கை பரப்புச் செயலா் பதவி வழங்கப்பட்டது.

தற்போது மாவட்டப் பொறுப்பாளா் பதவியை எதிா்பாா்த்திருந்த தங்க. தமிழ்ச்செல்வனின் ஆதரவாளா்களுக்கு, கட்சித் தலைமை அவருக்கு பிரிக்கப்பட்ட மாவட்டத்தின் பொறுப்பாளா் பதவி வழங்கியிருப்பது ஏமாற்றத்தையும், பிரிக்கப்பட்ட மாவட்டத்தில் உள்ள திமுக கட்சியின் மூத்த நிா்வாகிகளுக்கு குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தோ்தலுக்கு பயனளிக்குமா?

கட்சியின் மூத்த நிா்வாகிகளிடையே ஏற்கெனவே நிலவி வரும் பனிப் போரால் உள்கட்சிப் பூசலுக்கு பஞ்சமில்லாத தேனி மாவட்ட திமுகவில், மாவட்டம் பிரிப்பு மற்றும் புதிய பொறுப்பாளா்கள் நியமனம் தோ்தலுக்கு பயனளிக்கிறதோ இல்லையோ, நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களிடையே ஒருங்கிணைப்பின்றி, கட்சி வளா்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com